நீதிபதியை கண்டித்து மைசூரு டி.நரசிப்புரா தாலுகாவில் முழு அடைப்பு


நீதிபதியை கண்டித்து மைசூரு டி.நரசிப்புரா தாலுகாவில் முழு அடைப்பு
x
தினத்தந்தி 16 Feb 2022 2:13 AM IST (Updated: 16 Feb 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த நீதிபதியை கண்டித்து டி.நரசிப்புரா தாலுகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஆட்டோ, வாடகை கார்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடியது.பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மைசூரு: அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த நீதிபதியை கண்டித்து டி.நரசிப்புரா தாலுகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஆட்டோ, வாடகை கார்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடியது.பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நீதிபதியை கண்டித்து...

ராய்ச்சூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நீதிபதி மல்லிகார்ஜூன கவுடா அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்து தேசிய கொடி ஏற்றியுள்ளார். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சிக்கமகளூரு, மைசூரு டவுன் உள்ளிட்ட இடங்களில் முழு அடைப்பு நடந்தது. 

 இந்த நிலையில் நீதிபதி மல்லிகார்ஜூன கவுடாவை கண்டித்து மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா முழுவதும் 15-ந்தேதி(நேற்று) முழு அடைப்பு போராட்டத்திற்கு தலித் அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு வியாபாரிகள், ஆட்டோ, வாடகை கார் டிரைவர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். 

டி.நரசிப்புராவில் முழுஅடைப்பு

அதன்படி நேற்று டி.நரசிப்புரா தாலுகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதன்காரணமாக டி.நரசிப்புரா டவுனில் கடைகள், வணிக வளாகங்களை வியாபாரிகள், உரிமையாளர்கள் தாமாக முன்வந்து அடைத்தனர். மேலும் திறந்திருந்த சில கடைகளை தலித் அமைப்பினர் வலுக்கட்டாயமாக மூடவைத்தனர். 

ஆட்டோ, வாடகை கார்கள், தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. முழு அடைப்பால் வீட்டிலேயே பொதுமக்கள் முடங்கினர். அரசு பஸ்கள் ஓடின. ஆனாலும் அரசு பஸ்சுகளை மறித்து தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

சாலைகள் வெறிச்சோடின

இதன்காரணமாக அரசு பஸ் சேவை முடங்கியது. இதனால் வெளியூரில் இருந்து டி.நரசிப்புராவிற்கு வந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர். மேலும் இங்குள்ளவர்கள் வெளியூர்களுக்கு செல்வதில் சிரமப்பட்டனர்.  

இதனால் டி.நரசிப்புரா டவுனில் சாலைகள் வெறிச்சோடின. அதேபோல் கொள்ளேகால்-மைசூரு சாலை, டி.நரசிப்புரா-சாம்ராஜ்நகர் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

போலீஸ் பாதுகாப்பு

முக்கிய சாலை, சர்க்கிள்களில் தலித் அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த நீதிபதி மல்லிகார்ஜூன கவுடா மீது தேசத்துரோக வழக்குப்பதிய வேண்டும், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். சில இடங்களில் நீதிபதி மல்லிகார்ஜூன கவுடாவின் உருவப்படத்தை தீவைத்து எரித்தனர். 

இந்த முழுஅடைப்பு போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க டி.நரசிப்புரா தாலுகா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டி.நரசிப்புரா டவுன் முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தபோதிலும், தாலுகாவில் உள்ள கிராமப்புறங்களில் முழுஅடைப்புக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

Next Story