பசவராஜ் பொம்மையுடன் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்திப்பு;‘ஹிஜாப்' விவகாரம் குறித்து விவாதித்தனர்
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது ஹிஜாப் விவகாரம் குறித்து விவாதித்தனர்.
பெங்களூரு: ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது ஹிஜாப் விவகாரம் குறித்து விவாதித்தனர்.
கடும் நடவடிக்கை
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை முஸ்லிம் சமூகத்தை சோ்ந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யு.டி.காதர், தன்வீர் சேட், ஜமீர்அகமதுகான், ரகீம்கான், என்.ஏ.ஹாரீஷ், ரிஸ்வான் ஹர்ஷத், கனீஷ் பாத்திமா, எம்.எல்.சி.க்கள் சலீம் அகமது, நசீர் அகமது ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது அவர்கள், வருகிற பட்ஜெட்டில் முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஹிஜாப் விவகாரம் குறித்தும் விவாதித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது நிருபர்களிடம் கூறியதாவது:-
ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் சில அமைப்புகள் இருக்கின்றன. அத்தகைய அமைப்புகள் மீது கருணை காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் கூறியுள்ளோம். அதற்கு முதல்-மந்திரி, இந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளது. இதுகுறித்து விவாதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று உறுதியளித்தார்.
கூடுதல் நிதி
பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை அனுமதிக்காமல் இருப்பது சரியல்ல என்றும் நாங்கள் தெரிவித்தோம். இதை முதல்-மந்திரியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிப்பதாக முதல்-மந்திரி கூறியுள்ளார்.
இவ்வாறு சலீம் அகமது கூறினார்.
தன்வீர் சேட் எம்.எல்.ஏ. கூறுகையில், "ஹிஜாப் விவகாரத்தில் வெளியில் இருந்து இயங்கும் அமைப்புகளை அனுமதிக்கக்கூடாது என்று முதல்-மந்திரியிடம் கூறியுள்ளோம். பெற்றோரும், கல்லூரி நிர்வாகமும் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.
Related Tags :
Next Story