விண்கலம் செல்வது போன்று வானில் பிரகாசமாக தெரிந்த ஒளியால் பரபரப்பு
விண்கலம் செல்வது போன்று வானில் பிரகாசமாக தெரிந்த ஒளியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5.55 மணி அளவில் வானத்தில் கிழக்கு திசையில் பிரகாசமான ஒளி மெதுவான வேகத்தில் எந்தவிதமான சத்தமும் இன்றி பூமியை நோக்கி வருவது போல் தெரிந்தது. இதனை அதிகாலையில் வேலைக்கு சென்ற சிலர் பார்த்துள்ளனர். இது பற்றி அவர்கள் கூறுகையில், அதிகாலையில் வானத்தைப் பார்த்தபோது ஒளி பிம்பம் போன்று திடீரென தெரிந்தது. அதன் பிறகு அது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ஒளியின் பின்புறம் இருந்து பெரிய ஒளி வெள்ளம் பரவியது. விமானம் எதுவும் சென்றால் சத்தம் கேட்கும். ஆனால் சத்தம் எதுவும் வராததால் அது விமானம் இல்லை என்று தெரிகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்கலம் செலுத்தப்பட்டு, அந்த விண்கலம் வானில் சென்றபோது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அல்லது வேறு ஏதேனும் கோள் பூமிக்கு அருகே சுற்றியதா? விண்கற்கள் பூமியை நோக்கி வந்ததா? என்று தெரியவில்லை. அதிகாலை வேளையில் கிழக்கே வானத்தைப் பார்த்த அனைவருக்கும் இந்த காட்சி மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, என்றார்.
Related Tags :
Next Story