ஈரோடு ரெயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்


ஈரோடு ரெயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 16 Feb 2022 3:15 AM IST (Updated: 16 Feb 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ரெயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு
ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று காலை ரெயில்களில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். பாதுகாப்பு படை போலீஸ் கே.பி.அனில் என்பவர் ஆலப்புழா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரோந்து பணிக்காக சென்றார் அவர் ஜோலார் பேட்டையில் இருந்து குறிப்பிட்ட ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தபடி சென்று கொண்டிருந்தார். 
அப்போது டி1 பெட்டியில் ஒரு இருக்கையின் அடியில் 5 பொட்டலங்கள் கிடந்தன. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பொட்டலங்களை கைப்பற்றிய போலீஸ் அனில், அவை யாருக்கு சொந்தமானவை என்று பயணிகளிடம் கேட்டார். ஆனால் யாரும் அவற்றுக்கு சொந்தம் கொண்டாடவில்லை. எனவே அவர் ஒரு பொட்டலத்தை பிரித்து பார்த்தார். அதில் கஞ்சா இருந்தது.  எனவே அதை உடனடியாக எடுத்துச்சென்று ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.பி.நாயுடுவிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் 5 பொட்டலங்களையும் ஈரோடு ரெயில்வே பாதுகாப்புப்படை நிலையத்தில் ஒப்படைத்தனர். அவற்றை சோதனையிட்டபோது 5 பொட்டலங்களிலும் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ஆகும்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் நிஷாந்த் தலைமையில் 5 கிலோ கஞ்சா சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் 11 கிலோ கஞ்சா ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது 5 கிலோ கைப்பற்றப்பட்டு உள்ளது. 
எனவே ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தல் பாதையாக மாறி உள்ளதா... கஞ்சா கடத்தும் கும்பல்கள் ரெயில்களில் சென்று கஞ்சா விற்பனை செய்கிறார்களா? எந்த ரெயில் நிலையத்தில் கஞ்சா ரெயில்களில் ஏற்றப்படுகிறது. ரெயில்வே தொழிலாளர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story