வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை- ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஈரோடு
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வாரிசு சான்றிதழ்
அந்தியூர் தாலுகா நகலூரை சேர்ந்தவர் கருப்பணன் (வயது 60). இவர் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி விண்ணப்பித்தார்.
அப்போது அங்கு வருவாய்த்துறை உதவியாளராக இருந்த ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஜெயராஜ் (40), அலுவலக உதவியாளரான நகலூரை சேர்ந்த செல்வராஜ் (57) ஆகியோர் வாரிசு சான்றிதழ் வழங்கு வதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கருப்பணனிடம் கேட்டு உள்ளனர்.
அதற்கு அவர் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று கூறியதால், இறுதியில் ரூ.4 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று ஜெயராஜ், செல்வராஜ் ஆகியோர் கூறினர்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பணன் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
3 ஆண்டு சிறை
இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயராஜ், செல்வராஜ் ஆகியோரிடம் கருப்பணன் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த போலீசார் ஜெயராஜ், செல்வராஜ் ஆகிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்கள் மீது ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
இதற்கிடையே வழக்கின் புகார்தாரரான கருப்பணன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட செல்வராஜ் கடந்த 2020-ம் ஆண்டு இறந்தார்.
இந்தநிலையில் வழக்கை விசாரித்து வந்த ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு புஷ்பராணி நேற்று தீர்ப்பு கூறினார்.
அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ஜெயராஜூக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக அவர் கூறி இருந்தார்.
Related Tags :
Next Story