‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
பவானிசாகர் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதிக்கு, சத்தியமங்கலம் ஈரோடு மெயின் ரோட்டின் ஓரத்தில் மேற்குப்புறமாக குழாய் பதித்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 4 நாட்களாக அரியப்பம்பாளையம் நேரு நகர் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் முழுவதும் வீணாக ரோட்டில் சென்று கொண்டிருக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்யவேண்டும்.
ஊர்ப்பொதுமக்கள், அரியப்பம்பாளையம்.
தேங்கி கிடக்கும் சாக்கடை
பவானி பழைய பஸ் நிலையத்தில் இருந்து செல்லியாண்டி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச் சுவர் அருகே சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அந்த பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே நகராட்சி அதிகாரிகள் தேங்கி கிடக்கும் சாக்கடையை தூர்வார வேண்டும்.
ராதாகிருஷ்ணன், பவானி.
வாய்க்கால் கரையில் குப்பை
கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைப்புதூர் குப்பம்பாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் பொதுமக்கள் குப்பை கழிவுகளை கொட்டி வருகிறார்கள். அங்கு குப்பை கொட்டவேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அங்கு சுகாதாரம் பாதிக்கப்பட்டு, நோய் பரவும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கீழ்பவானி வாய்க்கால் கரையில் குப்பை கொட்டுவதை தடுப்பார்களா?
சந்தானம், கொடுமுடி.
புதர்கள் அகற்றப்படுமா?
கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சோளக்காளிபாளையம் மற்றும் பழைய சோளக் காளிபாளையம் ஆகிய ஊருக்கு பொதுவான சுடுகாடு பழைய சோளக்காளிபாளையம் காவிரி கரையை ஒட்டி அமைந்து உள்ளது. தற்போது இந்த சுடுகாடு முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே சுடுகாடு பகுதியில் வளர்ந்து உள்ள முட்புதர்களை அகற்றுவதுடன், பழுதடைந்த பாலத்தையும் சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், சென்னசமுத்திரம்.
அடிப்படை வசதி இல்லை
புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் (வார்டு எண் 10) கெம்பண்ணா கவுண்டர் வீதியில் இருந்து கோவை சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் 140 மீட்டர் தூர வண்டி பாதை உள்ளது. செடி-கொடிகள் முளைத்து தற்போது இந்த பாதையில் இருசக்கர வாகனம் கூட தடுமாறித்தான் செல்கிறது. இதேபோல் இந்த பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை என எந்த அடிப்படை வசதியும் இல்லை. நகராட்சி அதிகாரிகள் இனியாவது ெகம்பண்ணா கவுண்டர் வீதியில் அடிப்படை வசதியை ஏற்படுத்தி தருவார்களா?
பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.
பாராட்டு
கோபி கரட்டூர் வ.உ.சி வீதியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியில் ஏற்றி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் மின்இணைப்பில் பழுது ஏற்பட்டதால் தண்ணீர் தொட்டிக்கு ஏற்ற முடியாத நிலை உண்டானது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் மின் இணைப்பு பழுதை சரிசெய்துள்ளார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
பொதுமக்கள், கோபி கரட்டூர்.
Related Tags :
Next Story