சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கைது


சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2022 4:57 AM IST (Updated: 16 Feb 2022 4:57 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட மோதலால் அ.தி.மு.க. வேட்பாளர் கைது செய்யப்பட்டார். இதனால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ேமலும் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்:-
சேலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட மோதலால் அ.தி.மு.க. வேட்பாளர் கைது செய்யப்பட்டார். இதனால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ேமலும் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரசாரம்
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 58-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாண்டியன் (வயது 58) நேற்று வார்டுக்கு உட்பட்ட இந்திராநகர், வழிவாய்க்கால் காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.
மேலும் அந்த பகுதியில் தி.மு.க.வினர் சிலர் ஓட்டு கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியனுக்கும், தி.மு.க. வேட்பாளர் கோபாலின் உறவினர் சின்னபையன் (60) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கீழே விழுந்தனர். இதில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து 2 பேரும் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதனிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.
முற்றுகை போராட்டம்
இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியன் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் இல்லை. அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. எனவே பாண்டியனை காண்பிக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.
அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனிடையே அ.தி.மு.க.வினர் ஏராளமானவர்கள் திடீரென்று அன்னதானப்பட்டி 4 ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியல் நடந்து கொண்டிருந்த போது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பாண்டியனை போலீசார் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
வேட்பாளர் கைது
இதை பார்த்த அ.தி.மு.க.வினர் பாண்டியனை விடுவிக்க வேண்டும் என்று கூறி கூச்சலிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியன் மீது 294- பி (தகாத வார்த்தைகளால் திட்டுதல்), 323, (காயப்படுத்துதல்), 506/1 (மிரட்டல் விடுத்தல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியில் அழைத்து வந்தனர். அப்போது போலீஸ் நிலையம் முன்பு அவரது உறவினர்கள், அ.தி.மு.க.வினர் பலர் நின்று கொண்டு பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பின்னர் போலீசார் பாண்டியனை வேனில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் விடாமல் போலீஸ் வேன் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடம் இந்த மறியல் நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி போர்க்களமாக மாறியது. எனினும் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி விட்டு பாண்டியனை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 
இந்த நிலையில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட பாண்டினை விடுதலை செய்ய வேண்டும். மேலும் மோதலில் ஈடுபட்ட தி.மு.க.வினரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி அதே இடத்தில் அ.தி.மு.க.வினர் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். 2 முறை நடந்த மறியல் போராட்டத்தில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை 4 மணி முதல் இரவு வரை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
விடுதலை செய்ய வேண்டும்
இந்த நிலையில் நேற்று இரவு அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர் பொன்னையன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் பலர் போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹேடாவை சந்தித்து கைது செய்யப்பட்ட பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீதும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்.

Next Story