தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை- சூளகிரி செல்லும் ரோட்டில் வங்கி, அரசு மகளிர் பள்ளி மற்றும் பிரசித்திபெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
-எம்.அருண், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.
வேகத்தடை வேண்டும்
சேலம்- தாரமங்கலம் செல்லும் இரும்பாலை இருவழிச்சாலை மெயின் ரோட்டில் மாரமங்கலத்துபட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்கும் போது வேகமாக வரும் வாகனங்களால் பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும்
-செல்வம், கீரைப்பாப்பம்பாடி, சேலம்.
தெருநாய்கள் தொல்லை
சேலம் சின்னத்திருப்பதியில் மகாலட்சுமி கார்டன் பேஸ்-1, பேஸ்-2 குடியிருப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. சுமார் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நடந்து செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் தினமும் அச்சத்துடனே இருக்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-திரிபுரசுந்தரி, மகாலட்சுமி கார்டன், சேலம்.
குப்பைகளை எரிக்க கூடாது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஞ்சாயத்து கோணனூர் கிராமத்தில் குப்பை தொட்டியில் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாகி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகளை எரிக்க கூடாது. மேலும் அந்த தொட்டி நிரம்பியவுடன் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணா, கோணனூர், கிருஷ்ணகிரி.
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் மாரமங்கலத்துப்பட்டி இரும்பாலை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தாரமங்கலம்- சேலம் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டி எரிக்கின்றனர். இதன் அருகே பள்ளி ஒன்றும் அமைந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதுகுறித்து யூனியன் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி குப்பைகளை எரிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், மாரமங்கலத்துப்பட்டி, சேலம்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
சேலம் சன்னியாசிகுண்டு தேசிய நெடுஞ்சாலை அருகே மின்வாரிய அலுவலகம் பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி சன்னியாசிகுண்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சன்னியாசிகுண்டு, சேலம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் 7-வது வார்டு ஏற்காடு மெயின் ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரி பல மாதங்கள் ஆகிறது. இதனால் அந்த பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.
-ராஜீ, அஸ்தம்பட்டி, சேலம்.
Related Tags :
Next Story