திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம்
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது.இதில் உற்சவர் கல்யாணசுந்தரர், வடிவுடையம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 10.30 மணிக்கு தொடங்கிய திருமண வைபவத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் நடத்தப்பட்டது.
கல்யாணசுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் அரங்கேறின. பின்னர் மதியம் 12 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மகிழடி சேவை
முன்னதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேலுமணி அம்மாள், கோவில் நிர்வாகம் சார்பாக சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்து கல்யாண உற்சவத்தில் பங்கேற்றார். விழாவில் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பரிமாறப்பட்டது. திருமண விருந்தும் வழங்கப்பட்டது.
பின்னர் மாலையில் பால், பழம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 63 நாயன்மார்கள் உற்சவமும், இரவு கல்யாணசுந்தருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெற்றது. விழா ஏற்பாடுகள் கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story