2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் தொடக்கம்


2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 16 Feb 2022 5:42 PM IST (Updated: 16 Feb 2022 5:42 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தேனி:

 மழலையர் வகுப்புகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக நர்சரி பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் செயல்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகளும் தொடங்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மழலையர் வகுப்புகள் நடத்தி வந்தன.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அரசின்     கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழகத்தில் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நேற்று தொடங்கின. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடந்தன.

175 பள்ளிகள்

தேனி மாவட்டத்தில் 71 நர்சரி பள்ளிகள் உள்பட 175 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் உள்ளன. இதில் பெரும்பாலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மழலையர் வகுப்பு உள்ள போதிலும், வகுப்பறை பற்றாக்குறை காரணமாக மழலையர் வகுப்பு தொடங்கவில்லை. 

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள மழலையர் வகுப்புகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகள் நேற்று தொடங்கின. மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றனர். 

மாணவ, மாணவிகள் பலரும் உற்சாகமாக வந்தனர்.  சில மாணவ, மாணவிகள் அழுது அடம்பிடித்தனர். அவர்களை பெற்றோர்கள் சமாதானம் செய்து வகுப்பறையில் அமர வைத்தனர். 

இனிப்பு வழங்கிய ஆசிரியர்கள்

பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பள்ளிகளின் நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

 பரிசோதனைக்கு பிறகே அவர்கள் பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவ, மாணவிகள் முக கவசம் அணிந்து வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Next Story