பனியன் நிறுவன தொழிலாளி படுகொலை


பனியன் நிறுவன தொழிலாளி படுகொலை
x
தினத்தந்தி 16 Feb 2022 7:20 PM IST (Updated: 16 Feb 2022 7:20 PM IST)
t-max-icont-min-icon

பனியன் நிறுவன தொழிலாளி படுகொலை

பல்லடம் அருகே கல்லால் தாக்கி முகத்தை சிதைத்து பனியன் நிறுவன தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பனியன் நிறுவன தொழிலாளி கொலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் மாரிமுத்து வயது 40) இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேகம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தங்கி இருந்து அந்த நிறுவனத்தில் கடந்த 4 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மாரிமுத்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரை மர்ம ஆசாமிகள் கல்லால் தாக்கி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. 
இது பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீஸ் மோப்பநாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் மாரிமுத்து உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி அருள்புரம் வரை ஓடியது.  ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதையடுத்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். 
போலீசார் விசாரணை
 இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தனிப்படை போலீசார் கொலை நடந்த பகுதியில் உள்ள வீடுகள், பனியன் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகளின் உருவம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். பல்லடம் அருகே, கல்லால் தாக்கி பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
---
படம்உண்டு

Next Story