கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விசைத்தயாளர்கள் போராட்டம் வாபஸ்
கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விசைத்தயாளர்கள் போராட்டம் வாபஸ்
மங்கலம்
அமைச்சர்கள் மு.ெப.சாமிநாதன், கயல்விழி முன்னிலையில் நடந்த கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விசைத்தயாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லாத விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்த நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு உயர்த்தப்பட்ட கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்னும் வழங்கவில்லை. இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது.
கூலி உயர்வை அமல்படுத்தினால் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்ற நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ந் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள், கலெக்டர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம், பல்லடம் ரகத்துக்கு 20 சதவீதம் என கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்தாமல் இருந்தனர். இதனைக் கண்டித்தும், ஒப்பந்தக் கூலி உயர்வை வழங்க கோரியும், கடந்த மாதம் 9 ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.3500 கோடிக்கு காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வந்தனர்.
உடன்பாடு
இந்த நிலையில் நேற்று மங்கலத்தை அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்கத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையேயான கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்லடம் ரகத்திற்கு 15 சதவீதம், மற்ற ரகங்களுக்கு 19 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு 2 தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மேலும் தொழில் நிலைமை சீரானவுடன் 4 மாதங்களுக்கு பிறகு மீதி உள்ள கூலி பல்லடம் ரகத்திற்கு 5 சதவீதம், மற்ற ரகத்திற்கு 4 சதவீதம் வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி உறுதி செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தையில் பல்லடம், மங்கலம், 63வேலம்பாளையம், கண்ணம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்களும், பல்லடம், சோமனூர், அவினாசி, திருப்பூரைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களும் பங்கேற்றனர். கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 38 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் நேற்று முதல் சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சோமனூர் விசைத்தறி சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.
Related Tags :
Next Story