நீலகிரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறப்பு


நீலகிரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 16 Feb 2022 8:08 PM IST (Updated: 16 Feb 2022 8:08 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் தளர்வு அமலுக்கு வந்ததை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

ஊட்டி

கூடுதல் தளர்வு அமலுக்கு வந்ததை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

நர்சரி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நர்சரி பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

கொரோனா 3-வது அலை குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நர்சரி பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. 

உற்சாகமாக வந்தனர்

ஊட்டியில் உள்ள தனியார் நர்சரி பள்ளிகளுக்கு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்து வந்தனர். அவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எல்.இ.டி. திரை மூலம் பாடங்களை கற்பித்தனர். அங்கன்வாடி மையங்களோடு இணைந்து உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகள் என 32 பள்ளிகளில் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டன.

புத்தகங்கள் வழங்கப்பட்டது

ஊட்டியில் தலையாட்டுமந்து நகராட்சி நடுநிலை பள்ளியில் உள்ள நர்சரி வகுப்புக்கு மாணவ குழந்தைகள் வந்தனர். அவர்களை ஆசிரியர் கள் வரவேற்று சமூக இடைவெளி விட்டு அமர வைத்தனர். அவர்களுக்கு விளையாட உபகரணங்கள் வழங்கியதோடு புத்தகங்கள் வழங்கினர். 

பின்னர் எல்.இ.டி. திரை மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் கூடுதல் தளர்வுகள் காரணமாக முதல் தியேட்டர்கள் உள்பட கடைகள் 100 சதவீத பார்வையாளர்கள், வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டது. இதனால் இயல்பு நிலை திரும்பி உள்ளது.


Next Story