திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று(புதன்கிழமை) மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மாசித்திருவிழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் காலை 6.35 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு ரதவீதி நான்கிலும் பவனி வந்து 7.15 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் 7.25 மணிக்கு புறப்பட்டது.
இந்த பெரிய தேரை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘அரோகரா' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து 9 மணியளவில் நிலையை வந்தடைந்தது.
தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் 9.10 மணிக்கு புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்து 10.10 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது.
இன்று தெப்ப உற்சவம்
11-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) மாலை மேலக்கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு வந்தடைகிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் வந்து சேர்கிறார்கள். அங்கு இரவு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி, அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
12-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வருகிறார்கள். இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து கோவிலை வந்தடைகிறார்கள்.
திரளான பக்தர்கள்
தேரோட்ட நிகழ்ச்சியில், தர்மபுர ஆதீனம் நெல்லை கட்டளை திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் நீதிபதி வஷித்குமார், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் வேலவன், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், திருச்செந்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளர் பழக்கடை திருப்பதி,
ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், சிவசுப்பிரமணி ஆதித்தன், சிவனேச ஆதித்தன், குமரேச ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு
தேரோட்டத்தையொட்டி திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story