தூத்துக்குடியில் தொய்வின்றி வாக்குப்பதிவு நடப்பதை மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்: தேர்தல் அலுவலர் சாருஸ்ரீ


தூத்துக்குடியில் தொய்வின்றி வாக்குப்பதிவு நடப்பதை  மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்:  தேர்தல் அலுவலர் சாருஸ்ரீ
x
தினத்தந்தி 16 Feb 2022 9:05 PM IST (Updated: 16 Feb 2022 9:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மண்டல அலுவலர்கள் தொய்வின்றி வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ அறிவுரை வழங்கினார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மண்டல அலுவலர்கள் தொய்வின்றி வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ அறிவுரை வழங்கினார்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு பொருட்களை கொண்டு செல்லவும், வாக்குப்பதிவு முடிந்ததும் அவைகளை பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு சேர்க்கவும் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மண்டல அலுவலர்கள்
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 319 வாக்குச் சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட வாக்குப்பதிவு பொருட்களை கொண்டு செல்லவும், வாக்குப்பதிவு முடிந்ததும் அவைகளை பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு சேர்க்கவும் 16 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தயார் நிலையில் இருக்க கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
தொய்வின்றி...
அப்போது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட வாக்குப்பதிவு பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து மண்டல குழுவினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் குறித்த வழித்தட வரைப்படத்தை கையில் வைத்திருக்க வேண்டும். அந்த வழித்தடம் வழியாகவே பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். மேலும், ஏதாவது வாக்குச்சாவடியில் எந்திரங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக அங்கு விரைந்து சரி செய்ய வேண்டும். மண்டல குழுவினர் தொடர்ந்து ரோந்து பணியில் இருக்க வேண்டும். தொய்வின்றி வாக்குப்பதிவு நடைபெறுவதை மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரங்களை தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும், அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை பாதுகாப்பாக சேகரித்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். வாக்குப்பதிவு பொருட்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
பயிற்சியில் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல குழுவினரும் கலந்து கொண்டனர்.

Next Story