பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்
பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது.
பழனி:
மாசித்திருவிழா தேரோட்டம்
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம் 28-ந்தேதி முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் மாசித்திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதையடுத்து சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக காலை 9 மணிக்கு, புதுச்சேரி சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் மதியம் 4 மணி அளவில் அம்மன் தேரேற்றம் நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.
பக்தி பரவசம்
மாலை 4.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, கிழக்கு ரதவீதியில் உள்ள தேரடியில் இருந்து தேர் புறப்பட்டது. பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் புடை சூழ நான்கு ரத வீதியை சுற்றிய தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
யானை கஸ்தூரி
தேரோட்டத்தின்போது மேடான பகுதிகளில் தேர் செல்லும்போது, அதனை கோவில் யானை கஸ்தூரி தன் துதிக்கையால் முட்டி தள்ளியது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘ஓம் சக்தி...பராசக்தி...’ என்று சரண கோஷம் எழுப்பினர்.
திருவிழாவில் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மாரியம்மன் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story