எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்


எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 16 Feb 2022 9:48 PM IST (Updated: 16 Feb 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

திடீரென கொட்டிய கனமழையால் வாய்மேடு பகுதியில் உள்ள வயல்களில் நீர் தேங்கி நிற்கிறது. அங்கு எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். நெற்கதிர்களை கட்டிலில் வைத்து தூக்கி வரும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

வாய்மேடு:-

திடீரென கொட்டிய கனமழையால் வாய்மேடு பகுதியில் உள்ள வயல்களில் நீர் தேங்கி நிற்கிறது. அங்கு எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். நெற்கதிர்களை கட்டிலில் வைத்து தூக்கி வரும் அவலமும் ஏற்பட்டுள்ளது. 

திடீரென பெய்த கனமழை

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் 40 ஆயிரம் ஏக்கரில்  சம்பா சாகுபடி நடைபெற்றது. இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கனமழை கொட்டியது. ஆயக்காரன்புலம், வாய்மேடு, பஞ்சநதிக்குளம், மருதூர், தகட்டூர், தாணிக்கோட்டகம், தலைஞாயிறு, உம்பளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி அழுக தொடங்கியது. 
மழை நீரில் சாய்ந்த நெற்கதிர்கள் வயலிலேயே முளைத்து வருவதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில் உள்ள வயல்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை. வயலில் நீர் தேங்கி நிற்பதால், எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 

வைக்கோல் அழுகி வீண்

சிலர் வயலில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மோட்டார் என்ஜின் வைத்து வெளியேற்றி வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட வயல்களில் போடப்பட்டிருந்த வைக்கோல் தண்ணீரில் மூழ்கி அழுகி வீணாகிவிட்டது. இந்த வைக்கோலை கால்நடைகளுக்கு கூட உணவாக கொடுக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனைப்படுகின்றன. கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இந்த பருவத்தில் சம்பா சாகுபடி 2-வது முறையாக மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்திரம் மூலம் அறுவடை செய்ய வழியில்லாததால், விவசாயிகள் ஆட்களை வைத்து அறுவடை செய்து வருகிறார்கள். 

கட்டிலில் வைத்து...

இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. அறுவடை செய்த நெற்கதிர்களை கரைக்கு கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் வயலில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் நனையாமல் இருக்க விவசாயிகள் அவற்றை கட்டிலில் வைத்து சுமந்து கரைக்கு கொண்டு வரும் அவலமும் ஏற்பட்டு உள்ளது.  தமிழக அரசு மழையால் பாதித்த சம்பா வயல்களை ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடும், 100 சதவீத பயிர்காப்பீட்டு இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story