பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்-எடப்பாடி பழனிசாமி பேச்சு
பொய்யான வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என ஓசூரில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஓசூர்:
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி மற்றும் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஓசூர் ராம்நகரில் உள்ள அண்ணா சிலை அருகே நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
குட்டி ஜப்பான் ஓசூர்
தமிழகத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை நடத்த தி.மு.க.வுக்கு விருப்பம் இல்லை. சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. சார்பில் 525 வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை. அதனால் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்கவில்லை. நாங்கள் 10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததால் நெஞ்சை நிமிர்த்தி மக்களிடம் வாக்கு கேட்கிறோம்.
ஓசூர் மாநகராட்சி குட்டி ஜப்பானாக உள்ளது. இந்த மாநகராட்சி வந்தாரை வாழ வைக்கும் பகுதி. மாநகர பகுதியில், அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்பு மூலம் தான் நிறைவேற்ற முடியும். அ.தி.மு.க. மட்டும் தான் மக்களுக்கான கட்சி. அ.தி.மு.க.வினர் தான் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க கூடியவர்கள். மக்களுக்காக உழைக்க கூடியவர்கள். எனவே அ.தி.மு.க.விற்கு வாக்களித்து அனைத்து வேட்பாளர்களையும் அமோக வெற்றி பெற செய்யுங்கள்.
கார்ப்பரேட் கம்பெனி
அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சாதாரண தொண்டன், எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக, அமைச்சராக, ஏன் முதல்-அமைச்சராகவும் வர முடியும். தி.மு.க.வில் உழைத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். பெரிய தலைவர்கள் இருந்தும், அ.தி.மு.க.வில் இருந்து சென்ற சிலர் தான் அங்கு முக்கிய அமைச்சர்களாக உள்ளனர். தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
அ.தி.மு.க. ஆட்சியில் ஓசூருக்கு நிறைய திட்டங்கள் வழங்கப்பட்டன. ஓசூரை மாநகராட்சியாக அறிவித்தது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான். இந்த மாநகராட்சியின் முதல் மேயராக அ.தி.மு.க. வர ஆதரவளித்து, வாக்களியுங்கள். மேலும் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர்களாக அ.தி.மு.க.வினரே வரவேண்டும்.
யாரோ எழுதி கொடுப்பதை...
நீட் சம்பந்தமாக முதல்-அமைச்சரின் சவாலை ஏற்று எப்போது, எங்கே அழைத்தாலும் நானும், ஓ.பன்னீர்செல்வமும், மு.க.ஸ்டாலினுடன் விவாதிக்க தயார் என்று மதுரை பொதுக்கூட்டத்தில் சவால் விடுத்தேன். ஆனால் இதுவரை, மு.க.ஸ்டாலினிடமிருந்து பதிலே இல்லை.
யாரோ எழுதி கொடுப்பதை படித்து விட்டு, கீ கொடுத்தால் கை தட்டும் பொம்மை போன்று, பொம்மை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.
நீட் என்னும் நச்சு விதையை விதைத்தது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் அங்கம் வகித்தது தி.மு.க.. நீட் தேர்வினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அப்போது ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கூட்டுக்குடிநீர்
அ.தி.மு.க. ஆட்சியில் தான், ஓசூரில் ரூ.100 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து ராமநாயக்கன் ஏரிக்கு, குழாய் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. ரூ.5 கோடியில் பூங்கா, நடைபாதை, தியான மண்டபம் அமைக்கப்பட்டது. மக்களுக்கு சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.
ஓசூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.14 கோடியில் ரிங்ரோடு, ரூ.30 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.240 கோடியில் ரிங்ரோடு அமைக்கப்பட்டு வருகிறது.
ஓசூர்-பாகலூர் சாலையில், 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. ஓசூர் மாநகராட்சி அலுவலகமே நாம் தான் கட்டினோம். ஓசூரில், அரசு கலைக்கல்லூரியை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு தான்.
சர்வதேச மலர் ஏல மையம்
Related Tags :
Next Story