தேர்தல் நாளன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும்


தேர்தல் நாளன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும்
x
தினத்தந்தி 16 Feb 2022 10:29 PM IST (Updated: 16 Feb 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் நாளன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடலூர், 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தபால் வழி வாக்குச்சீட்டில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், வேட்பாளர்கள் விவரங்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி முடிவுற்றதும் 24 மணி நேரமும் உரிய பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பாக தொடர்புடைய வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து அனுப்பிவைத்திட, உரிய பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுதல் வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவு

பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று காலை 6.30 மணிக்குள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான மேசைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மையத்தில் மேற்கொள்ளவேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் தடையில்லா மின்சார வசதிகள் உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும். தேர்தல் முடிவுகளை அவ்வப்போது அறிவிக்க அறிவிப்பு பலகை மற்றும் ஒலிபெருக்கி வசதி அமைக்கப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிவுற்றவுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மல்லிகா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story