விழிப்புணர்வுடன் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்


விழிப்புணர்வுடன் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 16 Feb 2022 10:44 PM IST (Updated: 16 Feb 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வுடன் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் எவ்வித சட்டம்- ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவின் மேற்பார்வையில் 2 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 23 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,153 போலீசார் மற்றும் 28 நடமாடும் கண்காணிப்பு குழுவினர், 10 விரைவுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணி சம்பந்தமாகவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல தேர்தல் அலுவலர்களுடன் இணைந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லவும், தேர்தல் முடிந்து அவற்றை வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும்போதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.

அறிவுரைகள்

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் அபிஷேக்குப்தா, கரண்கரட், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உமாசங்கர், பார்த்திபன், அருண், இருதயராஜ், ரவீந்திரன், ராஜபாண்டி, பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பேசியதாவது:-
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் அனைவரும் பொதுமக்களிடம் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளுதல் அவசியம். வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு செய்ய வரும் வாக்காளர்களுடன் வாக்குவாதம் செய்தல் கூடாது. வாக்காளர்களிடம் குறிப்பிட்ட ஒரு கட்சியை சார்ந்த வேட்பாளர்களுக்கு ஓட்டு போடும்படி சைகை மூலமாகவோ, முகபாவனையாலோ மற்றும் வேறு விதமான அறிகுறி மூலமாகவோ 200 மீட்டருக்குள் ஆதரவு காட்ட அனுமதிக்கக்கூடாது. வாக்குச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களின் பணியில் தலையிடக்கூடாது.

நடவடிக்கை

தேர்தலில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வுடன் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மின்னணு வாக்குப்பதிவுஎந்திரங்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்றதில் இருந்து வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகளை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் வரை விழிப்புடன் பாதுகாக்க வேண்டும், வாக்குப்பதிவு அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்தவுடன் எக்காரணத்தை கொண்டும் வாக்குப்பதிவு செய்ய யாரையும் அனுமதிக்கக்கூடாது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி அடையாள அட்டை பெற்றவர்களை தவிர வேறு யாரையும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கக்கூடாது. பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் வாக்குச்சாவடிகளை முன்கூட்டியே கண்டறிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேர்தல் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்படும் இடங்களுக்கு காலதாமதமின்றி விரைந்து சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story