காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை


காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 16 Feb 2022 10:53 PM IST (Updated: 16 Feb 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

போடியில், காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

போடி:

பிளஸ்-1 மாணவி 

தேனி மாவட்டம் போடி இந்திராநகர் ரெயில் நிலைய சாலையை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி வனராணி (வயது 43). இவர், போடியில் உள்ள பஞ்சு பேட்டையில் வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு புவனேஸ்வரி, ஷிவானி (16) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் புவனேஷ்வரிக்கு திருமணமாகி, வடபுதுபட்டியில் கணவருடன் வசித்து வருகிறார். ஷிவானி, போடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் வனராணி வேலைக்கு சென்று விட்டார். பள்ளி விடுமுறை என்பதால் ஷிவானி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்தநிலையில் வனராணி வேலை முடிந்து மாலை வீடு திரும்பினார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. 

வனராணி, தனது மகளின் பெயரை சொல்லி அழைத்தார். இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பக்கத்து வீட்டு மாடி வழியாக தனது வீட்டுக்குள் சென்றார். 

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் ஷிவானி பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஷிவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  காதல் விவகாரம்

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
தற்கொலை செய்து கொண்ட ஷிவானி, வடபுதுப்பட்டியில் வசிக்கிற தனது அக்காள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவருடைய உறவினரும், எலக்ட்ரீசியனுமான அருண்குமார் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் காதலாக மலர்ந்தது. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

இந்தநிலையில் அருண்குமார், கடந்த 2 ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்த தகவல் ஷிவானிக்கு தெரியவந்தது. இது, ஷிவானியை அதிர்ச்சி அடைய செய்தது. இது தொடர்பாக, ஷிவானி அருண்குமாரிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

தன்னை காதலித்து அருண்குமார் ஏமாற்றி விட்டதாக கருதி ஷிவானி மனம் உடைந்து காணப்பட்டார். இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ்-அப் மூலம் அருண்குமாருக்கு ஷிவானி தகவல் அனுப்பினார். அதன்பிறகு ஷிவானி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு போலீசார் கூறினர். 

 வாலிபர் கைது 

இதற்கிடையே ஷிவானியை தற்கொலைக்கு தூண்டியதாக வடபுதுபட்டியை சேர்ந்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். 

காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story