அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
வரலாற்று சிறப்புமிக்க அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 81 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிங்கம்புணரி,
வரலாற்று சிறப்புமிக்க அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 81 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாரம்பரிய விழா
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வரலாற்று சிறப்புமிக்க அரளிப்பாறை மஞ்சு விரட்டு நடைபெற்றுவருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாவாக சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் இந்த மஞ்சுவிரட்டு நடப்பதாக கூறப்படுகிறது. இந்த வருடம் மாசிமகத்தையொட்டி நேற்று இங்கு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
கேரள சிங்கவள நாடு ஐந்துநிலை நாட்டார்களால் (5 மங்கல தலைவர்கள்) தலைமையில், வருவாய் கோட்டாச்சியர் பிரபாகரன் மேற்பார்வையில் சிங்கம்புணரி தாசில்தார் கயல் செல்வி, மருதிபட்டி ஊராட்சி தலைவர் வெண்ணிலா வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
முன்னதாக அரளிப்பாறை மலையடி வாரத்தில் உள்ள ஐந்து மங்கலத்திற்கான மெகா மாட்டு தொழுவம் தயார் செய்யப்பட்டு மஞ்சு விரட்டில் கலந்து கொள்ளும் காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக தொழுவத்தில் அடைத்தனர். பின்னர் ஐந்து நிலை நாட்டார்கள் ஜவுளி எடுத்து வந்து ஊரின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து மலையில் முருகனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு தொழுவத்திற்கு வந்து முதலில் கோவில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
81 பேர் படுகாயம்
முன்னதாக மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதுதவிர ஆங்காங்கே வயல் வெளிகளிலும் காடுகளிலும் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்தன. மஞ்சுவிரட்டை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு இருந்தன.
மஞ்சு விரட்டில் காளைகள் முட்டியதில் 81 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக 16 பேர் சிவகங்கை, மதுரை, திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு பணியில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்ம நாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story