கிராமப்பகுதிகளில் கழிவுநீர் தேங்காமல் கால்வாய்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
கிராமப்பகுதிகளில் கழிவுநீர் தேங்காமல் கால்வாய்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்
கள்ளக்குறிச்சி
வளர்ச்சி பணிகள்
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளம்பார் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணி, சாலை மேம்பாட்டு பணி மற்றும் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணி ஆகியவற்றை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு வந்த கிராம மக்கள் கழிவு நீர் கால்வாய்கள் தூர்ந்து கிடப்பதால் கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம பகுதிக்கு சென்று கழிவுநீர் கால்வாயை ஆய்வு செய்து உடனடியாக சுத்தம் செய்ய வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன் பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று குறிப்பிட்ட கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்தனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
அதிகாரிகளுக்கு உத்தரவு
ஊரக வளர்ச்சிதுறையின் சார்பில் விளம்பார் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தேன். அப்போது பொதுமக்கள் என்னிடம் தெரிவித்த புகாரின் பேரில் இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இனிவரும் காலங்களில் ஊரக பகுதிகளில் உள்ள கால்வாய்களில் கழிவுநீர் தேங்காமல் உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நாற்றாங்கால் ஏரி
விளம்பார் ஊராட்சியில் 145 ஏக்கர் பரப்பளவில் உள்ள நாற்றாங்கால் ஏரியில் 28.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏற்கனவே 10 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. தற்போது 10 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அதில் மரக்கன்றுகள் நடும் பணி, எல்லை வரையறை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினையும் ஆய்வு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story