பதற்றமான வாக்குச்சாவடிகளில் 74 நுண் பார்வையாளர்கள் நியமனம் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆலோசனை வழங்கினார்
நாமக்கல் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 74 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆலோசனை வழங்கினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 74 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆலோசனை வழங்கினார்.
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டு உள்ள நுண்பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கண்டறிப்பட்டு உள்ள 74 பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட உள்ளது. இவ்வாக்குச்சாவடிகளில் 74 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
நுண்பார்வையாளர்கள்
நுண்பார்வையாளர்கள் வாக்குச்சாவடி முகவர்களின் வருகை, வாக்குச்சாவடியில் உள்ள அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி அலுவலர்களின் செயல்பாடு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு, வாக்குப்பதிவு விவரங்கள், வாக்குச்சாவடியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதை, வாக்குப்பதிவு முடியும் வரை தொடர்ந்து கண்காணித்து, அதன் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும். மேலும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி இத்தேர்தலை சிறப்பாக நடத்திட ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) கோவேந்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story