அன்னவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
அன்னவாசல் விருத்த புரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அன்னவாசல்:
விருத்தபுரீஸ்வரர் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அதைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து மேள, தாளம் முழங்க வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் முத்துக்கருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாமி தரிசனம்
இதில் அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து காப்பு அவிழ்த்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர். தேர்திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு காளைக்கு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலுக்கு அழைத்து வந்து சாமி கும்பிட்டனர்.
Related Tags :
Next Story