நகரப்பகுதி, பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரம் வார்டில் தெருவை சுற்றி, சுற்றி வந்து வாக்கு சேகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதி, பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வார்டில் தெருவை சுற்றி, சுற்றி வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.
புதுக்கோட்டை:
இறுதி கட்ட பிரசாரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளிலும் நேற்று தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆளும் கட்சி தரப்பில் அமைச்சர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும், மூத்த நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொாரு வார்டிலும் திறந்த ஜீப் மற்றும் வேன்களில் நின்றபடி தெருவை சுற்றி, சுற்றி வந்து பிரசாரம் செய்தனர்.
ஒலி பெருக்கி
இதேபோல எதிர் கட்சியிலும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் வேட்பாளர்களை ஆதரித்து மும்முரமாக களத்தில் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தது. ஆட்டோவில் ஒலி பெருக்கியை கட்டியும், டிஜிட்டல் திரையில் வேன்களிலும் ஒளி, ஒலி எழுப்பிய படியும், ஸ்பீக்கர்களிலும் ஆடியோ ஒலிப்பதிவை ஒலி பரப்பியும் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதனால் புதுக்கோட்டை நகரப்பகுதியில் நேற்று அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை தெருக்களில் தேர்தல் பிரசார ஒலி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு வேட்பாளர் சென்ற நிலையில் மற்றொரு வேட்பாளர் வந்தப்படி இருந்தன. தெருவில் நடந்து சென்ற படியும் வீடு, வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.
வெளியூரில் வசிக்கும் வாக்காளர்கள்
இதற்கிடையில் புதுக்கோட்டை நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வார்டுக்குரிய வாக்காளர்களின் பட்டியலை வைத்து கணக்கெடுத்து அவர்களது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், அரசியல் கட்சியினர் பேசியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வார்டில் ஓட்டு இருந்தும் வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு தங்களுக்கு ஓட்டுப்போட வருமாறு கேட்டுக்கொண்டனர். தேர்தல் பிரசராம் இன்று மாலையுடன் முடிவடைகிற நிலையில் இன்று அதிகாலை முதல் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கீரமங்கலம்
கீரமங்கலம் பேரூராட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் கூட்டம் கூட்டாமல் தனித்தனியாகச் சென்று வீடு வீடாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு அரசியல் கட்சி கூட்டணி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசார பாடல்களுடன் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு வாக்கு சேகரித்தனர். பல்வேறு இடங்களில் நூதன வாக்கு சேகரிப்பு என்ற பெயரில் வாக்காளர்களை முகம் சுழிக்க வைக்கும் பிரசாரங்களுக்கு மத்தியில் வாக்காளர்களை கவரும் விதமாக கலை நிகழ்ச்சிகள் அமைந்துள்ளதாக கூறுகின்றனர்.
கரகாட்டம், பேண்டு வாத்தியங்களுடன் ஓட்டு சேகரிப்பு
கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் அனைத்து கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பாளர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் நேற்று வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தனர். மோட்டார் சைக்கிள் ஊர்வலம், பேண்டு வாத்தியம் என தி.மு.க.வின் பிரசாரத்தால் கறம்பக்குடி களை கட்டி உள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். 5 இடங்களில் மேடை அமைத்து கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பிரசாரம் நடைபெற்றது. இதை தவிர கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஒட்டு சேகரித்தனர். இதேபோல் பாரதீய ஜனதா, நாம் தமிழர், அ.ம.மு.க. எஸ்.டி.பி.ஐ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சில வார்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர்களும் ஆட்டோ பிரசாரம், ஊர்வலம் என பிரசாரத்தை முடக்கிவிட்டு உள்ளனர். எந்த வார்டில் யாருக்கு ஆதரவு அதிகம், வெற்றி பெற போவது யார் என தெரியாமல் வாக்காளர்களும் குழம்பம் அடைந்து உள்ளனர். இதற்கு விடை வருகிற 22-ந்தேதி தான் தெரியவரும்.
ஒரே நேரத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. பிரசாரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தி.மு.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று காலை 9-வது வார்டில் இருந்து பிரசாரம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச உள்ளதாக அப்பகுதியில் மேடை அமைக்கப்பட்டது. இதனால் அமைச்சர் ரகுபதி 8-வது வார்டில் பிரசாரம் தொடங்கினார். சிறிது நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வரவே 10 நிமிட இடைவெளியில் ஒவ்வொரு வார்டிலும் 2 பேரும் பிரசாரம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story