தி.மு.க. பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என சித்தரிக்கப்படுகிறது;பா.ஜ.க. மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என தி.மு.க.வை பா.ஜ.க. சித்தரிக்கிறது என நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.
நாகர்கோவில்,
பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என தி.மு.க.வை பா.ஜ.க. சித்தரிக்கிறது என நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.
கனிமொழி எம்.பி. பிரசாரம்
நாகர்கோவில் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இரவு வஞ்சியாதித்தன் புதுத்தெரு பகுதியில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் மக்களுக்கு தந்திருக்கிற வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தந்து கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரத்தை தந்த முதல்-அமைச்சர் அவர்.
அதுபோல நகர பஸ்களில் பெண்களுக்கு இனிமேல் கட்டணம் கிடையாது என பதவியேற்றதும் முதல் கையெழுத்து போட்டு அதை செயல்படுத்திய காட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க. ஆட்சியில் பால் விலை ஏறிக் கொண்டே இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பால் விலையை குறைக்கிறேன் என்று சொல்லி, அதேபோல் பால்விலையை குறைத்து காட்டிய ஆட்சி, தி.மு.க.
பெரும்பான்மை மக்களுக்கு எதிராக...
தென் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் கொண்டு வரப்படும். தொழிற்சாலைகள் தொடங்கி வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். இங்கு இருக்கக்கூடியவர்கள் நீண்டதூரம் சென்று வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி இருக்காது என்ற உறுதியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நமக்கு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான தனிப்பிரிவு தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு வந்த அ.தி.மு.க. எல்லாவற்றையும் கிடப்பில் போட்டது போல, எந்த திட்டத்தையும் கொண்டு வராதது போல இந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டு வைத்தார்கள். விரைவில் புற்றுநோய்க்கான தனிப்பிரிவு இங்குள்ள மருத்துவமனையில் கொண்டு வரப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜனதா வாக்கு கேட்டு மக்களிடம் மதரீதியான காழ்ப்புணர்ச்சிகளை விதைத்துக் கொண்டிருக்கிறார் கள். தமிழகத்தில் நாம் (தி.மு.க.) இங்கு இருக்கிற பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருப்பது போல ஒரு சித்தரிப்பை செய்து கொண்டிருக்கிறார்கள்.
வேலை தருவது கிடையாது
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகங்களில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் இந்துக்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இன்று மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜனதா அரசு நீட் தேர்வை கொண்டு வந்து நம்மீது திணித்து பெரும்பான்மை பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதுதான் பா.ஜனதா அரசு பெரும்பான்மை மக்களுக்கு செய்யக்கூடிய நன்மையா?. வடக்கில் இருக்கிறவர்கள் தான் இன்று வங்கிகளில், ரெயில்வே துறையில், தபால் துறையில் வேலை பார்க்க கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் அங்கு வேலை தருவது கிடையாது. வடநாட்டில் எந்த மூலைக்கு போனாலும் அதே நிலைதான்.
தமிழகத்துக்கு வரி பாக்கி
தமிழகத்தில் புயல், வெள்ள சேதத்துக்கு தமிழக அரசு இழப்பீடாக கேட்டது 6,230 கோடி ரூபாய். ஆனால் மத்திய பா.ஜனதா அரசு கொடுத்திருப்பது ரூ.816 கோடி. மீதியிருப்பதை கொடுக்க மனது இல்லையா?. இல்லையென்றால் தமிழகத்துக்கு கொடுத்து விடக்கூடாது என்ற எண்ணமா? என்று எனக்கு தெரியவில்லை.
இங்கு இருக்கக்கூடிய பா.ஜனதா கட்சியை சேர்ந்த நண்பர்கள், அவர்கள் ஆட்சி தான் மத்தியில் நடக்கிறது. எனவே இதை முதலில் கேட்டு வாங்கி கொடுத்து விட்டு பிறகு தமிழகத்தை பற்றி அக்கறை படட்டும், அதன்பிறகு அவர்களை நம்பலாம். கூட்டணியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. இதைக்கேட்டு வாங்கட்டும், இதற்காக உரிமைக்குரல் கொடுக்கட்டும். உலகத்திலேயே குழப்பமான ஜி.எஸ்.டி.யை கண்டுபிடித்து அதைப்போட்டுள்ள ஆட்சி, மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சி. ரூ.5 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு மத்திய அரசு வரி பாக்கியாக வைத்துள்ளது. நாம் வரி பாக்கி வைத்தால் வழக்கு போடுகிறார்கள். அவர்களை நாம் என்ன செய்வது?.
புதிய கல்வி கொள்கை
இவ்வாறு தமிழகத்தை எப்படி எல்லாம் வஞ்சிக்க முடியுமோ, அப்படி எல்லாம் வஞ்சித்துக் கொண்டிருக்கிற இவர்கள் புதிதாக மீனவர்கள் நலனைப் பற்றி அக்கறை உள்ளவர்கள் போல அதற்கு ஒரு மசோதாவை கொண்டு வருகிறார்கள். மீனவர்களுடைய உரிமைகளை, மாநிலங்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சட்டங்கள் இன்று கொண்டு வரப்பட்டு நம்மீது திணிக்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்து திணித்து, நமது பிள்ளைகளுடைய படிப்பை கெடுக்க பார்க்கிறார்கள். நீட் தேர்வைக் கொண்டு வந்து மருத்துவப்படிப்பையும் பாழாக்கி விட்டார்கள். இந்தியாவில் உயர்கல்வி கற்றவர்களைவிட தமிழகத்தில் உயர்கல்வி பெற்றவர்களின் சராசரி மிக அதிகம். நம்மிடம் இருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள எதுவும் கிடையாது. எனவே புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்து எல்லா கல்லூரிகளிலும் நுழைவு தேர்வை கொண்டு வந்து கலை அறிவியல் கல்லூரிகளில் கூட நமது பிள்ளைகள் படிக்க முடியாத நிலையை உருவாக்கி விட அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சியில் இருக்கும் போது...
அதனால் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு துளி இடம் கூட விட்டு தந்து விடக்கூடாது என்ற உறுதியோடு இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். பா.ஜனதாவினர் பிரசாரம் செய்யும் போது தி.மு.க.வினர் கோவிலுக்கு எதிரானவர்கள் என கூறுகிறார்கள். ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கை என்பது முக்கியம் அல்ல. ஆட்சியில் இருக்கும்போது மக்களுக்கு என்ன செய்கிறார்கள்? என்பது தான் முக்கியம். அந்த வித்தியாசம் கூட இருப்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இங்கு மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவிலில் ஒரு விபத்து ஏற்பட்டபோது அமைச்சர் நேரடியாக வந்தார். அதைத்தொடர்ந்து கோவிலை சரிசெய்ய ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவட்டாரில் இருக்கக்கூடிய ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் செய்யப்படுகிறது.
இப்படி மக்களுக்கு ஒரு அரசாங்கமாக எதை எல்லாம் செய்ய வேண்டுமோ? அதில் இருந்து ஒரு துளி அளவு கூட தி.மு.க. அந்த நேர்மையில் இருந்து விலகியதில்லை. பிசகியது இல்லை. இதுதான் உண்மை. பெரும்பான்மை, பெரும்பான்மை என்று சொல்லிக்கொண்டு பெரும்பான்மை மக்களின் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை பிடுங்கிக் கொண்டு போகக்கூடியவர்கள்தான் மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜனதா. நம் மீது அவர்கள் மொழியை திணிக்கிறார்கள். நம்முடைய உரிமைகளை, மாநில உரிமைகளை பறிக்கிறார்கள்.
எந்த சந்தர்ப்பத்திலும்...
விவசாயிகளுக்கு எதிராக சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்தது தி.மு.க., மக்களோடு நின்று போராடியது தி.மு.க. ஆனால் போராடிய மக்கள் மீது வழக்குகள் போட்டது, அ.தி.மு.க. போராடிய மாணவர்களை அடித்து விரட்டியது, அ.தி.மு.க. இவர்கள் இரண்டு பேரும் வேறு, வேறு இல்லை. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டும் தான் அவர்கள் கூட்டணி இல்லை. ஆனால் தேசிய அளவிலும், மாநில அளவிலும் கூட்டணி உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மை பிரித்தாள நினைக்க கூடியவர்களுக்கு கொஞ்சம் கூட எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் வாய்ப்பளித்து விடக்கூடாது.
அதனால் இங்கு நிறுத்தப்பட்டுள்ள தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் மற்றும் கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். மாநகர செயலாளர் மகேசை பற்றி உங்களுக்கு தெரியும், உங்களுக்கு பணியாற்றக்கூடியவர். அவர் எந்த அளவுக்கு உழைப்பார் என்று உங்களுக்கு தெரியும். தமிழக அரசின் திட்டங்களை எல்லாம் இந்த மாநகராட்சிக்கு கொண்டு வந்து சேர்க்கும் வாய்ப்பை நீங்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
கொட்டும் மழையில்...
நாகர்கோவிலில் நடந்த பிரசார கூட்டத்துக்கு கனிமொழி எம்.பி. வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்புவரை மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கொட்டும் மழையில் நனைந்தபடி அங்கு நின்று கொண்டிருந்தார்கள்.
முன்னதாக அஞ்சுகிராமம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, திட்டுவிளை உள்ளிட்ட பகுதிகளிலும் கனிமொழி எம்.பி. திறந்த வேனில் நின்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, ராஜன், நிர்வாகிகள் ஷேக்தாவூது, எம்.ஜே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story