அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவனின் பண்ணை வீட்டில் ‘திடீர்’ சோதனை


அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவனின் பண்ணை வீட்டில் ‘திடீர்’ சோதனை
x
தினத்தந்தி 17 Feb 2022 1:12 AM IST (Updated: 17 Feb 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே எடப்பாடி பழனிசாமியின் நண்பரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான இளங்கோவனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெத்தநாயக்கன்பாளையம்:-
ஆத்தூர் அருகே எடப்பாடி பழனிசாமியின் நண்பரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான இளங்கோவனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமியின் நண்பர்
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராக பதவி வகித்து வருபவர் இளங்கோவன். இவர் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் ஆவார். சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரான இவரது சொந்த ஊர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் ஆகும்.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க பரிசுப்பொருட்கள் புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் தோட்டத்து பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு நேற்று புகார் வந்தது.
பண்ணை வீட்டில் சோதனை
இதன்பேரில், இளங்கோவனுக்கு சொந்தமான தோட்டம் மற்றும் பண்ணை வீட்டுக்கு பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் முருகையன் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன் (ஆத்தூர்), முத்துச்சாமி (வாழப்பாடி) மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் காலை 7.30 மணிக்கு வந்து திடீரென சோதனை நடத்த  தொடங்கினர். 
தோட்டத்தில் வைக்கோல் போர் உள்பட அனைத்து பகுதிகளிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். சமீபத்தில் அங்கு இறந்த நாய் ஒன்று புதைக்கப்பட்ட இடத்தையும் தோண்டி சோதனையிட்டனர். மேலும் ஒரு சில தென்னை மற்றும் பாக்கு மரங்களின் அடியில் ஏதேனும் பணம் புதைக்கப்பட்டு உள்ளதா?  என கம்பியை கொண்டு தோண்டி பார்த்தனர். இந்த சோதனை மதியம் 12.30 மணி வரை 5 மணி நேரம் நீடித்தது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு
இந்த சோதனை குறித்து தகவல் கிடைத்ததும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்காடு சித்ரா, ஆத்தூர் ஜெய்சங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் பறக்கும் படையினரின் சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
அங்கு பதற்றமான சூழல் நிலவியதால், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து முறையிட்டனர். இருப்பினும் சுமார் 5 மணி நேர சோதனையின் முடிவில் தோட்டத்து பண்ணை வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். 
பணம் பறிமுதல் குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் தாசில்தார் முருகையன் கூறும் போது, ‘இளங்கோவனின் தோட்டத்து மேலாளர் நடராஜன், விவசாயத்திற்காக வைத்திருந்ததாக கூறிய ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து உள்ளோம். தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்களை குத்தகைக்கு விட்டதில் பெறப்பட்ட தொகை 50 ஆயிரம் ரூபாய் என்று தோட்டத்து மேலாளர் நடராஜன் தெரிவித்தார்’ என்றார். இதையடுத்து பறக்கும் படையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் பேட்டி
இந்த சோதனை குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் பறக்கும் படையினரின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது ஆகும். அ.தி.மு.க.வை முடக்க இதுபோன்ற செயல்களில் அதிகாரிகளை வைத்து தி.மு.க.வினர் செயல்பட்டு வருகின்றனர். 
எடப்பாடி பழனிசாமியையும், இளங்கோவனையும் கைது செய்வோம் என ஆத்தூரில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அது ஒருபோதும் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை எல்லாம் தங்கள் ஆட்சியில் கொண்டு வந்ததாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அவர்கள் செய்த சாதனைகளை கூறாமல் அ.தி.மு.க.வின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பயப்பட மாட்டோம்
அது மட்டுமல்லாமல் இளங்கோவன் தோட்டம் உள்ள இடம் தேர்தல் நடைபெறும் பகுதிக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஊராட்சி பகுதி. இந்த பகுதியில் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம் காரணமாக தி.மு.க.வினர் இதுபோன்ற சம்பவங்களை அதிகாரிகள் மூலம் நடத்தி அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டி பார்க்க முயற்சிக்கின்றனர். அதற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் எந்தவிதத்திலும் பயப்பட மாட்டோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இளங்கோவனின் பண்ைண வீட்டில் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தியது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story