நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை அளிக்கவில்லை


நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை அளிக்கவில்லை
x
தினத்தந்தி 17 Feb 2022 1:12 AM IST (Updated: 17 Feb 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, தி.மு.க. ஆட்சியில் நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை அளிக்கவில்லை என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேச்சேரி:-
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, தி.மு.க. ஆட்சியில் நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை அளிக்கவில்லை என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தேர்தல் பிரசார கூட்டம்
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பேரூராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் வனவாசியில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- 
பொய் வாக்குறுதிகளை கூறி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தேர்தல் நேரத்தில் கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 70 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளதாக மு.க.ஸ்டாலின் பொய் கூறி வருகிறார்.
இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினர். ஆனால் தரவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு செய்துள்ளனர். மேலும் தி.மு.க. ஆட்சியில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
மருத்துவக்கல்வி
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இந்திய அளவில் சட்டம், ஒழுங்கில் முதன்மை மாநிலமாக தமிழக அரசு விருது பெற்றுள்ளது. மேலும் மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொடுத்தோம். இதனால் கிராமப்புற ஏழை மாணவ-மாணவிகள் 541 பேர் பயன் அடைந்தனர். எடப்பாடி தொகுதி முழுவதும் 21 மாணவிகள் இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
இந்தியாவிலேயே தார்ச்சாலை அதிகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என மத்திய மந்திரி கூறியுள்ளார்.
மின்கட்டண சலுகை
மத்திய அரசின் பணிகள் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் பகுதிகளில் விசைத்தறி, கைத்தறிகள் அதிகளவில் உள்ளன தற்போது பட்டு நூல் விலை உயர்வால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அறிக்கையாகவும், சட்டசபையிலும் பேசினேன். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. 
விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை அளிப்பதாக கூறினார்கள். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெசவாளர்களுக்கு மின்கட்டண சலுகையும் அளிக்கவில்லை.
எனவே தி.மு.க. அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. வனவாசி அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இதை நிரூபிக்க அனைவரும் அயராது உழைத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச்செய்து தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story