2 குழந்தைகளின் தாய் தற்கொலை
2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் 2-வது வார்டை சேர்ந்தவர் முத்தையன். விவசாயி. இவரது மனைவி யோகேஸ்வரி (வயது 23). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். முத்தையன், நேற்று மதியம் லாடபுரம் கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு மனைவி, குழந்தைகளை அழைத்து சென்றிருந்தார். பின்னர் அவர் வயலில் விவசாய பணி செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர், வீட்டிற்கு சென்று உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால் எடுத்துக்கொண்டு மீண்டும் வயலுக்கு வந்துள்ளார். அப்போது வயலில் உள்ள கொட்டகையில் துப்பட்டாவால் யோகேஸ்வரி தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முத்தையன் யோகேஸ்வரியை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், யோகேஸ்வரியை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று யோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், குழந்தைகளுக்கு உணவு மற்றும் பாலை யோகேஸ்வரி எடுத்து வரவில்லையாம். இதனை முத்தையன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் யோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யோகேஸ்வரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியரும் மேல் விசாரணை நடத்த உள்ளார்.
Related Tags :
Next Story