ரூ.2 கோடி மதிப்பிலான 250 கிலோ கஞ்சா-வாகனங்கள் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான 250 கிலோ கஞ்சா மற்றும் 5 வாகனங்களை தனிப்படையினர் பறிமுதல் செய்ததுடன் இது தொடர்பாக 14 பேரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
ஆந்திராவில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான 250 கிலோ கஞ்சா மற்றும் 5 வாகனங்களை தனிப்படையினர் பறிமுதல் செய்ததுடன் இது தொடர்பாக 14 பேரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க வேண்டும் என தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன், ஏட்டுகள் இளையராஜா, சுந்தர்ராமன், விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படையினருக்கு தஞ்சை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
கஞ்சா பொட்டலங்கள்
இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி-தஞ்சை சாலையில் தனிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த ஒரு மினிலாரியை சந்தேகத்தின்பேரில் தனிப்படையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த மினிலாரியில் அனல்மின் நிலைய எந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த மினிலாரியை முழுமையாக தனிப்படையினர் சோதனை செய்தபோது அங்கே ஏராளமான பொட்டலங்கள் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. அது என்ன பொட்டலங்கள்? என தனிப்படையினர் சோதனை செய்தபோது அவை கஞ்சா பொட்டலங்கள் என்பது கண்டறியப்பட்டது.
250 கிலோ பறிமுதல்
அந்த பொட்டலங்களை எல்லாம் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். மொத்தம் 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மினிலாரியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
பழுதான எந்திரங்களுடன் வந்த மினிலாரி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு கிலோ கஞ்சா ரூ.3 ஆயிரம் வீதம் விலைக்கு வாங்கி இலங்கைக்கு கடத்துவதற்கு ஒரு கும்பல் திட்டமிட்டது. அதன்படி கஞ்சாவை வாங்கிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள், கஞ்சா வாசனை வெளியே வராமல் இருக்க பொட்டலங்களாக கட்டினர்.
பின்னர் அந்த கஞ்சாவை கடத்தி செல்வதற்கு வாகனங்களை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தேடியபோது, பீகாரில் உள்ள அனல்மின் நிலையத்தில் இருந்து பழுதான எந்திரங்களை பழுது பார்ப்பதற்காக தமிழகம் நோக்கி மினி லாரி செல்வதை கண்டறிந்தனர்.
தஞ்சையில் சிக்கினர்
உடனே அந்த மினிலாரியில் வந்தவர்களை தொடர்பு கொண்டு பேசியவர்கள், அந்த மினி லாரியை விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்து அதில் இருந்த எந்திரங்களுக்கு மத்தியில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்தனர்.
பின்னர் அந்த மினிலாரி ரேணிகுண்டா, திருப்பதி, வேலூர் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது. தொடர்ந்து திருச்சி வழியாக தஞ்சையை நோக்கி சென்றபோது தனிப்படையினரிடம் சிக்கிக் ெகாண்டனர்.
இலங்கைக்கு கடத்த திட்டம்
இந்த கஞ்சா பொட்டலங்களை பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடையை சேர்ந்த 2 பேர் வாங்கி நாகை மாவட்டம் வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடையில் இருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டது தனிப்படையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கஞ்சாவை அனுப்பி வைத்தவர்கள் முதல் கஞ்சாவை இலங்கைக்கு கடத்துபவர்கள் வரை அனைவரையும் கைது செய்ய திட்டமிடப்பட்டு 3 தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டனர்.
14 பேர் கைது
அதன்படி இந்த கஞ்சா கடத்தலில் தொடர்புடைய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அல்லிகுண்டம் பகுதியை சேர்ந்த சுக பெருமாள்(வயது 42), கட்டதேவன்பட்டி ஒத்தைவீடு பகுதியை சேர்ந்த முத்துலிங்கம்(31), சேலம் மாவட்டம் மேட்டூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த வெள்ளையன்(29), மேட்டூர் மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(38).
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கீத்தலூரை சேர்ந்த சீனிவாசலு(30), விசாகப்பட்டினம் காகிதாகிராமத்தை சேர்ந்த கணபதி(27), புச்சியாபட்டு மண்டலத்தை சேர்ந்த சோப்பா நாகராஜ்(31), திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்(27), அரியமங்கலம் சுந்தரபவனம் பகுதியை சேர்ந்த முருகன்(28), திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரை சேர்ந்த ராஜா(43), ஜாம்புவானோடையை சேர்ந்த வீரகணேசன்(28), செந்தில்(27), சென்னை தி.நகரை சேர்ந்த உமா மகேஸ்வரன்(51), கம்பத்தை சேர்ந்த ரகுராம்(36) ஆகிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 வாகனங்கள் பறிமுதல்
மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி மற்றும் 3 கார்கள், 1 ஸ்கூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் தஞ்சை தீர்க்கசுமங்கலி மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களையும், வாகனங்களையும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி நேற்று நேரில் பார்வையிட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்.
இது குறித்து தனிப்படை போலீசார் கூறும்போது, விசாகப்பட்டினத்தில் ஒரு கிலோ கஞ்சா ரூ.3 ஆயிரத்திற்கு வாங்கப்படும். அங்கிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு, இலங்கையில் இருந்து வரும் நபர்களிடம் ஒரு கிலோ ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வீதத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கஞ்சா இலங்கையில் கிலோ ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. எனவே பறிமுதல் செய்யப்பட்ட இந்த கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் இருக்கும். மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரி, கார்கள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடி இருக்கும் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story