48 வார்டில் 268 வேட்பாளர்கள்


48 வார்டில் 268 வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 17 Feb 2022 1:57 AM IST (Updated: 17 Feb 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

100 வருட பாரம்பரியம் மிக்க சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சியை இணைத்து முதல் முறையாக மாநகராட்சி தேர்தல் நடக்கிறது.

சிவகாசி, 
100 வருட பாரம்பரியம் மிக்க சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சியை இணைத்து முதல் முறையாக மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. 
வேட்பு மனு 
கடந்த மாதம் 28-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடைசி நாளான கடந்த 4-ந்தேதி வரை 48 வார்டுகளில் போட்டியிட 322 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்களை சரி பார்க்கப்பட்ட போது 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 
இறுதியாக போட்டியில் 318 பேர் இருந்தனர். இந்த நிலையில் 50 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் 268 பேர் உள்ளனர்.
வாக்காளர்கள்
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளையும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. 
வாக்குபதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க காவல்துறை சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 148 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 54 ஆயிரத்து 290 பேரும், பெண்கள் 56 ஆயிரத்து 851 ஒருவரும், திருநங்கைகள் 7 பேரும் உள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். இந்த மாநகராட்சியின் மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தீவிர பிரசாரம்
முதல் முறையாக மேயர் தேர்தலை சந்திக்கும் சிவகாசி மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 
இதனால் நகரப்பகுதியில் எப்போதும் பரபரப்பாக இருக்கிறது. குறிப்பாக காலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் பிரசாரங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதிகாலை நேரங்களில் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story