கடலுக்குள் படகை செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதி


கடலுக்குள் படகை செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதி
x
தினத்தந்தி 17 Feb 2022 2:03 AM IST (Updated: 17 Feb 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் பகுதியில் கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். துறைமுக வாய்க்காலை தூர்வார வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் பகுதியில் கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். துறைமுக வாய்க்காலை தூர்வார வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கடல் உள்வாங்கியது
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. நேற்று முன்தினம் மழை இல்லாததால் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர். அப்போது துறைமுக வாய்க்காலில் தண்ணீர் இல்லாமல் படகுகள் தரை தட்டி நின்றன. இந்த வாய்க்காலில் எந்த நேரமும் 5 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருக்கும். 
இந்த நிலையில் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடலுக்குச்சென்று பார்த்தபோது கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதிப்பட்டனர். இதேபோல் நேற்றும் கடல் உள்வாங்கி காணப்பட்டது. துறைமுக வாய்க்காலிலும் தண்ணீர் குறைந்த அளவே காணப்பட்டது. 
தூர்வார நடவடிக்கை
இதுபற்றி ஏரிப்புறக்கரை கிராமத்தைச்சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், துறைமுக வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் தரை தட்டி நின்ற படகை 5 பேர் சேர்ந்து தள்ளி கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம். பின்னர் மீன்பிடித்து விட்டு மிகத்தாமதமாக கரை திரும்பினோம். இந்த பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்குவதால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படுகிறது. துறைமுக வாய்க்காலில் தண்ணீர் இருந்தால் தான் கடலுக்கு சென்று வருவது எளிதாக இருக்கும். 
துறைமுக வாய்க்காலை தூர்வாரி இருபுறமும் சுவர்கள் அமைத்தால் கடல் உள்வாங்கும் நேரங்களில் வாய்க்காலில் கடல் நீர் தேங்கி நிற்கும். எனவே வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story