21 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது


21 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 17 Feb 2022 2:11 AM IST (Updated: 17 Feb 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில், 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் கஞ்சா, புகையிலை, திருட்டு மது விற்பனை ஆகிய குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வருகிறார்கள். இத்தகைய குற்றச்செயல்களை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் நேற்று காலையில் கோணத்தில் இருந்து தேரூர் செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு அம்மன் கோவில் அருகே 3 வாலிபர்கள் கையில் 2 பைகளுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். 
போலீசாரை கண்டதும் வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். உடனே, போலீசார் அவர்களை சிறிது தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த 2 பைகளையும் சோதனை செய்தபோது, அதில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 
இதனைதொடர்ந்து போலீசார் அவர்களை கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கோட்டார் பெரியவிளையை சேர்ந்த சுகுமாரன் என்ற சுள்ளான் (வயது 27), தட்டான்விளையை ேசர்ந்த சர்சில் பிரபு (20) மற்றும் கோட்டார் காந்திஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (25) என்பதும், இவர்கள் பாறசாலை பகுதியில் இருந்து 21 கிலோ கஞ்சா வாங்கி வந்து நாகர்கோவிலில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சுகுமாரன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Next Story