மாசி திருவிழாவில் பறவை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் மற்றும் பறவை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசித் திருவிழாவில் நேற்று பக்தர்கள் பறவைக்காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
மாசி திருவிழா
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா 7-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர் திருவிழாக்கள் நடத்தி வந்தனர்.
இதன் சிகர நிகழ்ச்சியாக 10-ம் நாள் திருவிழா நாடார் சமுதாய மண்டகப்படி சார்பில், நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு அன்று காலை முதல் கீழப்பாவூர் சிவன் கோவிலில், குறும்பலாப்பேரி, பனையடிப்பட்டி, பஞ்சபாண்டியூர், செட்டியூர், குருசாமிபுரம், கல்லூரணி, திப்பணம்பட்டி, ஆரியங்காவூர், ஆவுடையானூர், அரியப்பபுரம், பாவூர்சத்திரம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் அனைவரும் வேல்குத்தி, பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்தனர்.
பறவை காவடி
மேலும் ஒரு பத்தர் பறவைக்காவடி எடுத்து வந்தார். பால்குட ஊர்வலம் கோவில் வந்தடைந்தவுடன் மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இரவு 12 மணிக்கு அர்த்தசாம பூஜையும் தொடர்ந்து கோவில் வளாகத்தில் இசைக்கச்சேரியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நாடார் சமுதாய மண்டகப்படியினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் சுற்றுப்பகுதிகளில் ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு நெல்லை - தென்காசி ரோடு, கடையம் ரோடு, கீழப்பாவூர் ரோடு உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story