ஈரோடு காவிரி ஆற்றில் சாயம் அலசிய போது 100 டன் துணிகள் பறிமுதல்- கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோடு காவிரி ஆற்றில் நள்ளிரவில் சாயம் அலசியபோது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் 100 டன் துணிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு
ஈரோடு காவிரி ஆற்றில் நள்ளிரவில் சாயம் அலசியபோது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் 100 டன் துணிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
காவிரியில் சாயக்கழிவு
ஈரோடு காவிரி ஆற்றில் சாயப்பட்டறை கழிவுகள், தோல் தொழிற்சாலை கழிவுகள் நேரடியாக கலக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த கழிவுகள் குடிநீரில் கலந்து பொதுமக்கள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார்கள். காவிரியில் மாசு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகளும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். எனவே சாயக்கழிவு உள்ளிட்ட கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு சீல் வைத்தல், மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார்கள்.ஆனால், சில சாய ஆலைகள் தங்கள் நிறுவனங்களில் சாயத்துணிகளை சலவை செய்வதை விட்டு, நேரடியாக வாகனங்களில் துணிகளை எடுத்து வந்து காவிரி ஆற்றில் சலவை செய்து வருவது தெரிந்து சில மாதங்களுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கலெக்டருக்கு தகவல்
ஆனால், அதிகாரிகளின் கண்காணிப்பு, விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு ஆகியவற்றை கடந்து நள்ளிரவு நேரத்தில் சிலர் காவிரி ஆற்றில் சாய துணிகளை அலசி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் சிலர் வாகனங்களில் சாய துணிகளை காவிரி ஆற்றில் அலசுவதற்காக கொண்டு வந்தது தொடர்பாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு தகவல்கள் கிடைத்தது. உடனடியாக அவர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
அதன்பேரில் ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார், உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு வந்தனர்.
100 டன் துணிகள்
அப்போது காவிரியில் தண்ணீர் குட்டைபோல் தேங்கி இருந்த ஒரு பகுதியில் சாய துணிகள் ஊற வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதற்கிடையே அங்கு துணிகளை அலசிக்கொண்டு இருந்தவர்களுக்கு அதிகாரிகள் சோதனைக்கு வரும் தகவல் தெரிந்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்கள். தண்ணீரில் ஊற வைக்கப்பட்டு இருந்த துணிகளை மட்டும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அந்த பகுதியில் வெளிச்சம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று அதிகாலை வரை நடந்தது. பின்னர் அதிகாரிகள் கூறும்போது, காவிரி ஆற்றில் அலசுவதற்காக கொண்டு வரப்பட்ட சாயத்துணிகள் சுமார் 100 டன் அளவுக்கு கைப்பற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சாய துணிகள் அலசிய பகுதியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு, மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்கள்.
Related Tags :
Next Story