பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள ஆதிகருவண்ணராயர் கோவிலுக்கு செல்ல வனத்துறை ‘திடீர்' கட்டுப்பாடு- சோதனைச்சாவடியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முற்றுகை
பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோவிலுக்கு செல்ல வனத்துறை திடீர் கட்டுப்பாடு விதித்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சோதனை சாவடியை முற்றுகையிட்டார்கள்.
பவானிசாகர்
பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோவிலுக்கு செல்ல வனத்துறை திடீர் கட்டுப்பாடு விதித்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சோதனை சாவடியை முற்றுகையிட்டார்கள்.
ஆதிகருவண்ணராயர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹடா அருகே உள்ள கெஜலெட்டியில் பழமையான ஆதி கருவண்ணராயர் பொம்மி தேவி கோவில் உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வசிக்கும் உப்பிலிய நாயக்கர் சமுதாய மக்களின் குலதெய்வம் ஆதிகருவண்ணராயர்.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பவுர்ணமி அன்று இங்கு மாசி மகம் விழா நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் வந்து ஆடு, கோழிகளை சாமிக்கு பலியிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு செல்வார்கள்.
தடுத்து நிறுத்தம்
வழக்கம்போல் நேற்று மாசி பவுர்ணமி என்பதால் ஆதிகருவண்ணராயர் கோவிலுக்கு பல வாகனங்களில் பவானிசாகர் வனப்பகுதியை நோக்கி பக்தர்கள் படையெடுத்தார்கள்.
ஆனால் பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டியுள்ள காராச்சிகொரை வனத்துறை சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. ஏன் நிறுத்துகிறீர்கள் என பக்தர்கள் கேட்டதற்கு 100 வாகனங்கள் மட்டும் அனுப்பப்படும். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய பிறகு அடுத்த 100 வாகனங்கள் அனுப்பப்படும் என வனத்துறையினர் பதில் அளித்தார்கள்.
பரபரப்பு
வனத்துறையினர் அளித்த பதிலால் பக்தர்கள் ஆத்திரமடைந்து சோதனைச் சாவடியை முற்றுகையிட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முதலில் 100 வாகனங்கள் அனுப்பப்பட்டால் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மறுநாள் மாலைதான் வருவார்கள். அதன்பின்னர் நாங்கள் சென்று சாமி தரிசனம் செய்தால் அது சரியா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
பேச்சுவார்த்தையில் முடிவு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன் ஆகியோர் ஆசனூர் கோட்ட மாவட்ட வன அதிகாரி தேவேந்திர குமார் மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின் முடிவில் பக்தர்கள் வந்த அனைத்து வாகனங்களும் வனப்பகுதிக்குள் உள்ள ஆதிகருவண்ணராயர் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டன. இதனால் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story