கார் மீது லாரி மோதல்; மாணவி, 3 மாணவர்கள் உடல் நசுங்கி சாவு
பெங்களூரு அருகே தறிகெட்டு ஓடிய கார், லாரி மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில், மாணவி, 3 மாணவர்கள் உயிர் இழந்த பரிதாபம் நடந்துள்ளது. மேலும் 2 பேர் கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூரு: பெங்களூரு அருகே தறிகெட்டு ஓடிய கார், லாரி மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில், மாணவி, 3 மாணவர்கள் உயிர் இழந்த பரிதாபம் நடந்துள்ளது. மேலும் 2 பேர் கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 பேர் சாவு
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா அட்டூர் கேட் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்தகார் கோலாரில் இருந்து பெங்களூருவை நோக்கி சென்றது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியை இடித்து தள்ளிவிட்டு எதிர் ரோட்டிற்கு கார் சென்றது.
அந்த பெங்களூருவில் இருந்து ஒரு லாரி கோலாரை நோக்கி வந்தது. இந்த நிலையில், தறிகெட்டு ஓடிய அந்த கார், லாரியின் மீது மோதியது. லாரி மீது மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரு இளம்பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.
2 பேர் கவலைக்கிடம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒசக்கோட்டை போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், காருக்குள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள், மாணவி
விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் பெயர் வைஷ்ணவி, பரத் ரெட்டி, சிரில், வெங்கடேஷ் என்ற வெங்கட் என்பதும், படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் பெயர் அங்கி ரெட்டி, ஸ்ரீ கிருஷ்ணா என்ற ஸ்ரீ என்று தெரிந்தது. பலியான 4 பேரும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்கள். இவர்கள் 6 பேரும் பெங்களூரு கே.ஆர்.புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. பி.பி.எம். படித்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் காரில் ஜாலியாக வலம் வருவதற்காக வெளியே புறப்பட்டு சென்றுள்ளனர். காரை வெங்கடேஷ் ஓட்டி சென்றிருந்தார். கோலார் மாவட்டத்திற்கு சென்ற 6 பேரும், அங்குள்ள காபி கடைக்கு சென்று சிறிது நேரம் இருந்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து நள்ளிரவில் பெங்களூருவுக்கு திரும்பிய போது வெங்கடேசின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறி கெட்டு ஓடி தடுப்பு சுவரிலும், லாரியிலும் மோதியது தெரியவந்தது.
அதிவேகமே காரணம்
மேலும் காரை வெங்கடேஷ் அதிவேகமாக ஓட்டியதாகவும், அதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி விபத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், குடிபோதையில் காரை அவர் ஓட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தொிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஒசக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மாணவி, மாணவர்கள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story