ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் ஆபாசமாக நடந்த வாலிபர் சிறையில் அடைப்பு


ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் ஆபாசமாக நடந்த வாலிபர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 17 Feb 2022 5:41 AM IST (Updated: 17 Feb 2022 5:41 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். பெண் நீதிபதி எச்சரிக்கையால் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தாம்பரம்,

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் கடந்த 9-ந்தேதி இரவு முடிச்சூரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் உள்பட 3 பெண்கள் மட்டும் பயணம் செய்தனர். மீனம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது அந்த பெட்டியில் வாலிபர் ஒருவர் ஏறினார்.

ரெயில் புறப்பட்டதும் ஓடும் ரெயிலில் அந்த வாலிபர், அங்கிருந்த பெண்கள் முன்பு அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக நடந்து கொண்டார். இதனை கண்டித்த இளம்பெண், வாலிபரின் ஆபாச செயலை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதனால் அந்த வாலிபர், குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் தண்டவாளத்தில் குதித்து தப்பி ஓடினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து தாம்பரம் ரெயில்வே போலீசார் இளம்பெண்ணிடம் புகாரை பெற்று, ஓடும் ரெயிலில் ஆபாசமாக நடந்து கொண்ட மீனம்பாக்கம், பாண்டிதெருவைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் கைதான லட்சுமணனை, தாம்பரம் மாஜிஸ்திரேட்டு சஹானா முன் ஆஜர்படுத்தினர். அவர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை(எப்.ஐ.ஆர்.)மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் வழங்கினர். அதில் கைதான வாலிபர் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (பெண்களை அவமானப்படுத்துதல்) பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாஜிஸ்திரேட்டு சஹானா, ஓடும் ரெயிலில் வாலிபர் நடந்து கொண்ட விதத்தில் இந்த ஒரு சட்டப்பிரிவில் மட்டும் வழக்குப்பதிவு செய்வதா? என கேள்வி எழுப்பி, போலீசாரை கடிந்து கொண்டதுடன் எச்சரிக்கையும் விடுத்தார்.

மேலும் முதல் தகவல் அறிக்கையை திருத்தி, கூடுதலாக பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் சேர்த்து லட்சுமணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். அதன் பிறகே போலீசார் முதல் தகவல் அறிக்கையை திருத்தி, வாலிபர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைதான லட்சுமணனை சிறையில் அடைத்தனர்.

Next Story