திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 356 வாகனங்கள் ஏலம் - 3 நாட்கள் நடக்கிறது


திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 356 வாகனங்கள் ஏலம் - 3 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 17 Feb 2022 6:27 AM IST (Updated: 17 Feb 2022 6:27 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 356 வாகனங்கள் 3 நாட்கள் ஏலம் விடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 319 இருசக்கர வாகனங்கள், 33 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 356 வாகனங்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தலின்படி வருகிற 25, 26 மற்றும் 28 ஆகிய 3 நாட்களில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே காலை 10 மணி அளவில் ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முக கவசம் அணிந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். முன் வைப்பு கட்டண தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இருசக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 சதவீதம், 3 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதத்தை உடனடியாக செலுத்திவிட வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவுச்சான்று (ஆர்சி புக்), ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வரவேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் ஏலம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டண தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story