பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்


பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்
x
தினத்தந்தி 17 Feb 2022 6:29 AM IST (Updated: 17 Feb 2022 6:29 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி:
பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேங்காய் கொள்முதல்
தமிழக அரசு விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் அவர்களின் வருவாயை அதிகரிக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்னை சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய்களை மத்திய அரசின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தேங்காய் பருப்பு விலை ஒரு கிலோ ரூ.73.19 முதல் ரூ.90.99 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை தேங்காய் 1 கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை தேங்காய் 1 கிலோ ரூ.110-க்கும், 6 மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
பயன்பெற வேண்டும்
இந்த திட்டம் பாலக்கோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் செயல்படுத்தபட உள்ளது. இதன் மூலம் பயன்பெறும் விவசாயிகள், நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் பாலக்கோடு ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் இந்த மாதம் முதல் தொடங்கி வருகிற ஜூலை மாதம் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தென்னை விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story