கைதியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
மனைவி சாவு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுக்கம்பாறை
மனைவி சாவு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனைவி சாவு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவரது மனைவி நந்தினி (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நந்தினி தூக்கில் பிணமாக தொங்கினார்.
நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முரளி, ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். மேலும் அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக ராஜாமணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாமணி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
உடலை வாங்க மறுத்து மறியல்
ஜெயிலில் இருந்த ராஜாமணிக்கு நேற்று முன்தினம் ‘திடீர்’ மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜாமணி இறந்துவிட்டார். அவரது உடல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இதனை அறிந்த ராஜாமணியின் உறவினர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
நேற்று முன்தினம் ராஜாமணியின் உடல் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. ஆனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 30-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர்- ஆரணி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாக்குவாதம்
தகவலறிந்த வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருண்குமார், பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜாமணியின் சாவில் மர்மம் உள்ளதால் விசாரணை நடத்த வேண்டும். அவரது குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சென்றனர். அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story