விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசனக்கருவி மானியம்


விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசனக்கருவி மானியம்
x
தினத்தந்தி 17 Feb 2022 6:30 PM IST (Updated: 17 Feb 2022 6:30 PM IST)
t-max-icont-min-icon

சித்திரைப்பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசனக்கருவி மானியமாக வழங்கப்படும் என வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கூறினர்.

நீடாமங்கலம்:-

சித்திரைப்பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசனக்கருவி மானியமாக வழங்கப்படும் என வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கூறினர். 

நீர்வள, நிலவள திட்டம்

நீடாமங்கலத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டமானது உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நீர் நுட்ப மையம் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகளான வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், நீர்வள, நிலவள திட்ட விஞ்ஞானி செல்வமுருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

உளுந்து சாகுபடி

சித்திரை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய 100 சதவீத மானியத்தில் உளுந்துடன் தெளிப்பு நீர் பாசனக்கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் விதைகள், உரங்கள், இனக்கவர்ச்சி பொறி, மஞ்சள் வண்ண ஒட்டு பொறி மற்றும் நடமாடும் நீர்த் தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். 
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அடுத்த மாதம் (மார்ச்) மாதம் 4-ந் தேதிக்குள் ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா அடங்கல் அசல், நில வரைபடம், சிறு குறு விவசாயி சான்றிதழ் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

நீடாமங்கலம்-மன்னார்குடி

இதில் திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த நீடாமங்கலம், மன்னார்குடி, நன்னிலம், குடவாசல் மற்றும் முத்துப்பேட்டை வட்டார விவசாயிகள் பயன்பெறலாம். மன்னார்குடி வட்டாரத்தில் செருமங்கலம், காரிகோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, ஆலங்கோட்டை, மூவாநல்லூர், துளசேந்திரபுரம், நீடாமங்கலம் வட்டாரத்தில் வடுவூர் புதுக்கோட்டை, வட பாதி, தென்பாதி, அக்ரஹாரம், சாத்தனூர், எடமேலையூர், கீழப்பட்டு, அய்யம்பேட்டை, சோனாபேட்டை, எடஅன்னவாசல், கட்டக்குடி, கொத்தங்குடி, காளாச்சேரி, காரக்கோட்டை, ராணிதோப்பு, புளியங்குடி, நெம்மேலி, பருத்திகோட்டை, தளிக்கோட்டை, சமயன்குடிகாடு, ஓவேல்குடி.

நன்னிலம்-குடவாசல்

நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டாரத்தில் அணைப்பாடி, மகாராஜபுரம், அகலங்கன், கடுவங்குடி, திருமீயச்சூர், கொத்தங்குடி, செங்காந்தி, திருக்கொட்டாரம், கடகம், சுரக்காயூர், ஆலத்தூர், வஸ்திராஜபுரம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் மங்கள், கீழக்காடு, உதயமார்த்தாண்டபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story