இறைச்சி வியாபாாி உள்பட 2 பேர் பலி
போடியில், மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இறைச்சி வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
போடி:
இறைச்சி வியாபாரி
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகர் புதுகாலனி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் பிரபாகரன் என்ற பிரபு (வயது 26). அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் பிரதீப் (27).
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கெஜனாப்பாறையில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் பிரபு கூலி வேலை செய்து வந்தார். பிரதீப், தனது வீட்டருகே இறைச்சி கடை நடத்தி வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும், போடிமெட்டு மலையடிவாரத்தில் உள்ள முந்தல் கிராமத்தில் இருந்து போடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
2 பேர் பலி
போடி-முந்தல் சாலையில், இரட்டைவாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக, வைக்கோல் ஏற்றி கொண்டு முன்னால் சென்ற மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பிரபு, பிரதீப் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் அந்தோணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 நாளே ஆன ஆண் குழந்தை
போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியான 2 பேரை பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரதீப்புக்கு, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவருடைய மனைவி ஜெகதீஷ்வரி.
இந்த தம்பதிக்கு, 21 நாட்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த 3 வாரத்தில் தந்தை பலியான சம்பவம், அந்த குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அண்ணன்-தம்பி உயிரை குடித்த விபத்து
இதேபோல் விபத்தில் பலியான பிரபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு அரவிந்த் என்ற அண்ணன் இருந்தார். இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த சாலை விபத்தில் பலியானார்.
அண்ணன்-தம்பி 2 பேரின் உயிரையும் சாலை விபத்து குடித்து விட்டது. அதனை சொல்லி, அவருடைய குடும்பத்தினர் கதறி அழுத காட்சி கண்களை குளமாக்கியது. பிரபுவின் தங்கைக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் விபத்தில் சிக்கி பிரபு பலியாகி விட்டார். இதனால் தங்கையின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் போடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story