நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்கு 1,800 போலீசார் நியமனம்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்கு 1,800 போலீசார் நியமனம்
x
தினத்தந்தி 17 Feb 2022 7:20 PM IST (Updated: 17 Feb 2022 8:31 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 1,800 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல 60 படைகள் அமைக்கப்பட்டன.

திண்டுக்கல்: 

தேர்தல் பாதுகாப்பு பணி 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள்  (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வாக்குப்பதிவுக்காக 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதில் 189 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும்.

இந்த பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைந்த பகுதிகளில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் உள்ளூர்வாசிகள் வேட்பாளர்களாக களம் இறங்குவதால் கடுமையான போட்டி நிலவுகிறது. எனவே தேர்தலின் போது அசம்பாதவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

வாக்குச்சாவடிகளில் போலீசார் 

அதன்படி 737 வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்படுகின்றனர். மேலும் 189 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வாக்காளர்கள், முகவர்கள், வேட்பாளர்களை தவிர மற்றவர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்லாத வகையில் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுதவிர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் தலைமையில் மொத்தம் 13 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 13 அதிரடிப்படையினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அதிலும் குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகள், பிரச்சினைக்குரிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இதுதவிர இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10 தனிப்படைகளும், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 30 தனிப்படைகளும் நியமிக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார் பிரச்சினைக்குரிய பகுதிகளுக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு 

இதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு 60 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 2 போலீசாரை கொண்ட 60 படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்களை  நாளை (வெள்ளிக்கிழமை) மதியத்துக்குள் வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்வார்கள்.

அதேபோல் நாளை மாலை வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்களை பெற்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று ஒப்படைக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் மொத்தம் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதுதவிர ஊர்க்காவல் படை வீரர்கள் 300 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில்  டி.ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம்  இன்று நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் பாதுகாப்பு குறித்து போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்ல போலீசாருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக பாதுகாப்பு பணிக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். 

Next Story