1 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் 1 டன் பிளாஸ்டிக் குப்பைகளை வனத்துறையினர் அகற்றினர்.
பழனி:
பழனி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள், அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் உள்ளன. இங்குள்ள வனத்தை பாதுகாக்க பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் குப்பைகள், மதுபாட்டில்கள் ஆகியவற்றை வனப்பகுதியில் வீசக்கூடாது, புகைப்பிடிக்க கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனை சிலர் பொருட்படுத்தாமல் வனப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் வீசுகின்றனர். இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பழனி வனத்துறை சார்பில் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையோரம் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
இதில் வனச்சரகர் பழனிக்குமார் தலைமையில் வன பணியாளர்கள் ஈடுபட்டனர். தேக்கந்தோட்டம் பகுதியில் இருந்து வட்டமலை புதுப்பாலம் வரையில் சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், மதுப்பாட்டில்கள் என சுமார் ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து வனச்சரகர் பழனிக்குமார் கூறுகையில், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின் அனுப்பப்படுகின்றன.
எனவே சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் பிளாஸ்டிக், மதுபாட்டில்களை வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாரத்தில் ஒரு நாளில் வனப்பகுதியில் உள்ள குப்பைகள் அகற்றும் பணி மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.
Related Tags :
Next Story