‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 17 Feb 2022 7:52 PM IST (Updated: 17 Feb 2022 7:52 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்கம்பம் சீரமைக்கப்பட்டது



திருவள்ளுர் மாவட்டம் திருமுல்லைவாயல் மூர்த்தி நகர், 1-வது மெயின் ரோட்டில் இருந்த மின்கம்பம் பழுதடைந்திருப்பது குறித்த செய்தி ‘தினத்தந்தி' புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின் வாரியத்தின் துரித நடவடிக்கையால் மின் கம்பம் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக மின் வாரியத்துக்கும், ‘தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.

சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?

சென்னை கொளத்தூர், அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள கலைஞர் கருணாநிதி தெருவில் கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்கியுள்ளது. நீண்ட நாட்களாக கழிவுநீர் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சாலையை கடக்க அக்கம்பக்கத்தினர் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தெற்குத்தமிழன், சமூக ஆர்வலர்.

கிணற்றுக்கு புத்துயிர் கிடைக்குமா?

சென்னை பரங்கிமலை, பூந்தோட்டம் முதல் தெருவில் இருக்கும் கிணறு ஒன்று பராமரிப்பின்றி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அந்த கிணற்றில் குப்பைகளையும், மாமிச கழிவுகளையும் கொட்டுகின்றனர். மேலும் கோழி, பூனை போன்ற உயிரினங்களும் அந்த கிணற்றில் விழுந்து இறந்துள்ளன. இதனால் கிணறு அருகே துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. கிணற்றுக்கு புத்துயிர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- சமூக ஆர்வலர்.

உடைந்துபோன கால்வாய் மூடி


சென்னை குரோம்பேட்டை நாகல்கேணி பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனம் அருகே இருக்கும் நடைபாதையில் உள்ள கழிவுநீர் வடிகால்வாய் மூடி முழுவதும் உடைந்து நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் கவனக்குறைவால் அதில் தவறி விழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நடைபயணி.

மைதானம் சீரமைக்கப்படுமா?

சென்னை பட்டினப்பாக்கம், எஸ்டேட் காவல்நிலையம் பின்புறம் ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. போலீஸ் அதிகாரிகள் உடற்பயிற்சி செய்யவும் அந்த பகுதி இளைஞர்கள் விளையாடவும் அந்த மைதானத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் சமீப காலமாக மாடுகளின் இருப்பிடமாக இந்த மைதானம் மாறி உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுத்து மைதானத்தை புதுப்பித்து தரவேண்டும்.

- ஜெயச்சந்திரன், பட்டினப்பாக்கம் எஸ்டேட்.

நோய் தொற்று அபாயம்

சென்னை வள்ளுவர் கோட்டம், வாட்டர் டேங்க் அருகே வித்யோதயா பிரதான சாலையில் கழிவுநீர் குழாய் உடைந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டும்.

- பொதுமக்கள்.

குண்டும் குழியுமான சாலையால் அவதி


சென்னை அடையாறு காமராஜ் அவென்யூ 2-வது தெருவில் இருக்கும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிவா, அடையாறு.

மின்வாரியம் கவனிக்குமா?

சென்னை புத்தகரம் திருமால் நகர் 3-வது தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. இதில் சில மின் இணைப்புகள் சாலையின் மேல் பகுதியில் கொடுக்கப்படுகின்றது. இப்படி கொடுக்கப்படும் இணைப்புகளால் மழை காலங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு மின்வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தெரு மக்கள்.

சேதமடைந்த கழிவுநீர் மூடி

சென்னை அண்ணாநகர் 4-வது அவென்யூ சாந்தி காலனி சாலையில் உள்ள கழிவுநீர் வடிகால்வாய் மூடி பகுதியாக உடைந்து காணப்படுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகளும் இதனால் சிரமப்படுகின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

- பொதுமக்கள்.

சுகாதார நிலையம் பராமரிக்கப்படுமா?


காஞ்சீபுரம் மாவட்டம் பையம்பாடி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையம் நீண்ட நாட்களாக உபயோகமின்றி உள்ளது. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் செடி கொடிகள் வளர்ந்து புதர் நிறைந்துள்ளன. மேலும் இந்த கட்டிடத்தை திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். பெருவேலி ஊராட்சி கவனித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கண்ணன், பையம்பாடி.

Next Story