தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்
வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான முரளிதரன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் பேசும்போது, "வட்டார தேர்தல் அலுவலர்கள் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான உபகரணங்களை நாளை (இன்று) கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்துக்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, படிவங்கள், சீல், மை உள்ளிட்ட பொருட்கள், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா? என பார்வையிட்டு ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்துக்கும் அனுப்ப வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பழுதுபார்ப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பொறியாளர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக சரி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் உரிய படிவங்களை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூர்த்தி செய்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சக்திவேல் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story