இறுதிநாளில் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்த வேட்பாளர்கள் மேளதாளம் இசைத்து கரகாட்டத்துடன் ஊர்வலமாக சென்று பிரசாரம்


இறுதிநாளில் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்த வேட்பாளர்கள் மேளதாளம் இசைத்து கரகாட்டத்துடன் ஊர்வலமாக சென்று பிரசாரம்
x
தினத்தந்தி 17 Feb 2022 8:09 PM IST (Updated: 17 Feb 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதிநாளில் வேட்பாளர்கள் பம்பரமாக சுழன்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இதற்காக மேளதாளம் இசைத்து கரகாட்டத்துடன் ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்தனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள், 3 நகராட்சிகளில் 75 வார்டுகள், 23 பேரூராட்சிகளில் 363 வார்டுகள் என மொத்தம் 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 752 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தள்ளுபடி, வாபஸ் போக மீதி 2 ஆயிரத்து 69 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.
அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 2 வார்டுகள், 5 பேரூராட்சிகளில் 6 வார்டுகள் என மொத்தம் 8 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதனால் மீதமுள்ள 478 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 61 பேர் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் அனைவரும் கடந்த 2 வாரங்களாக சூறாவளியாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சூடுபிடித்த பிரசாரம்
தொடக்கத்தில் கொரோனாவால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் குறைந்தபட்ச ஆதரவாளர்களுடன் சென்று வீடு, வீடாக வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். தங்களுடைய வாக்குறுதிகளை துண்டு பிரசுரத்தில் அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கி ஆதரவு திரட்டினர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியது. ஒலிபெருக்கியில் கொள்கை விளக்க பாடல்களை ஒலிக்க வைத்து, தாரை தப்பட்டை இசைத்து திரளான ஆதரவாளர்களுடன் சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.
இதில் அரசியல் கட்சிகளின் ஆதரவாக முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பிரசாரம் செய்தனர். இதற்கு சிறிதும் சளைக்காமல் சுயேச்சைகளும் போட்டிபோட்டு பிரசாரம் செய்தனர். தொலைக்காட்சி பிரபலங்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இறுதி நாளில் களைகட்டியது
இந்த நிலையில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இறுதி நாள் ஆகும். அதுவும் மாலை 6 மணியோடு பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் நேற்று காலையில் இருந்து பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்தனர். இதில் பெரும்பாலான வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வாக்குசேகரித்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் வேட்பாளர்கள் இறுதிகட்டமாக ஆதரவு திரட்டினர். இதில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதமாக பிரசாரம் செய்து வாக்காளர்களை கவர முயன்றனர். ஒருசில வேட்பாளர்கள் கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகளுடன் ஆதரவாளர்களோடு ஊர்வலமாக தெரு, தெருவாக வலம் வந்தனர்.
அதேபோல் அரசியல் தலைவர்கள், மிக்கி-மவுஸ் வேடம் அணிந்தவர்கள், அலங்கரித்த குதிரையோடு, ஒலிபெருக்கியில் பாடல்களை ஒலிக்க வைத்து ஆதரவாளர்களுடன் வார்டு முழுவதும் வேட்பாளர்கள் சென்றனர். மேலும் தாரை தப்பட்டை, பேண்டு வாத்தியங்களை இசைத்து துண்டு பிரசுரம் வழங்கியும் வாக்கு கேட்டனர். இதில் அனைத்து வேட்பாளா்களும் ஆதரவாளர்கள் புடைசூழ வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் இறுதிநாள் வாக்குசேகரிப்பு களைகட்டியது.

Next Story