மாசி மகத்தையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 2-வது நாளாக சாமிகளுக்கு தீர்த்தவாரி


மாசி மகத்தையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 2-வது நாளாக சாமிகளுக்கு தீர்த்தவாரி
x
தினத்தந்தி 17 Feb 2022 10:13 PM IST (Updated: 17 Feb 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

மாசி மகத்தையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 2-வது நாளாக சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

கடலூர், 

மாசி மகத்தையொட்டி கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளை அலங்கரித்து மாட்டு வண்டி, மினி லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் தீர்த்தவாரி நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் மாசி மாத பவுர்ணமி என்பதால் அன்றைய தினமே கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து 50 சாமிகளை ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி நடத்தினர்.

2-வது நாளாக தீர்த்தவாரி

தொடர்ந்து நேற்று மதியம் வரை மகம் நட்சத்திரம் இருந்ததால் 2-வது நாளாக கடலூர் உச்சிமேடு பொட்லாயி அம்மன் ஊதுவர்த்தி அலங்காரத்திலும், முதுநகர் பீமாராவ்நகர் கங்கை அம்மன் பழங்களால் அலங்கரித்தும், கிழக்கு ராமாபுரம் பொட்லாயி அம்மன் குளிர்பானத்தாலும் அலங்கரித்து கொண்டு வரப்பட்டது.

இது தவிர கூத்தப்பாக்கம் மாரியம்மன் என மாநகரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் உற்சவ மூர்த்திகளை அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்றவற்றில் அமர்த்தி ஊர்வலமாக கடலூர் தேவனாம் பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது பொதுமக்களும் புனித நீராடி, சாமிகளுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

பொதுமக்கள் குவிந்தனர்

மாசிமக திருவிழாவை காண கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் தேவனாம்பட்டினம் கடற்கரையில் குவிந்தனர். பெரும்பாலானோர் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். நேற்று முன்தினத்தை விட நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் குவிந்தது.

கடலூர் தேவனாம்பட்டினம் கிராமத்தில் இருந்து சில்வர் பீச் வரை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் கடலில் நீண்ட தூரம் சென்று குளித்தனர். அவர்களை போலீசார் எச்சரித்தும் சிலர் கேட்காமல் கடலில் நீண்ட நேரம் குளித்தனர். இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடாக தீயணைப்பு வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.
விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பரங்கிப்பேட்டை

இதேபோல் மாசி மகத்தையொட்டி பரங்கிப்பேட்டை, அகரம், ரெயிலடி, குறிஞ்சிப்பாடி, ஆலப்பாக்கம், மேட்டுப்பாளையம், பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், சின்னஆண்டிகுழி, பெரிய ஆண்டிக்குழி, புதுச்சத்திரம், சிலம்பிமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சாமிகள் அலங்கரிக்கப்பட்டு வாகனங்களில் ஊர்வலமாக பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுப்பேட்டை கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதேபோல் கிள்ளை கடற்கரையிலும் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. 

விருத்தாசலம் 

புண்ணிய நதியான விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து ஆசி வழங்குவார்கள் என கூறப்படுகிறது. இதனால் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தாிசனம் செய்தனர். 

Next Story